பக்கம்:வாழும் வழி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

115


எனவே மனிதன் தன்னுடனேயே தோன்றி உலகில் நிலைத்துள்ள ஒரு பொருளை மற்றொரு பொருளாகச் செய்கின்றான்; அதுதான் அவனால் முடியும் என்ற முடிவுக்கு வருவோம். வருவதென்ன அம்முடிவுதானே நம்மைத் தேடி வரும்.

ஒன்றை மற்றொன்றாகச் செய்யும் மனிதன், ஒரு விநாடியிலாவது அல்லது ஒரு நாழிகையிலாவது ஒரு நாற்காலியின் பகுதிகளனைத்தையுஞ் செய்து பொருத்தி விடுகின்றானா? இல்லை. ஒரு நேரத்தில் ஒரு காலைக் கடைகிறான். தனித்தனியாக நான்கு காலையுங் கடைந்த பின், பின்னால் சாரும் கட்டைகளைத் தனித்தனியாகக் கடைவான். பின் அக்கட்டை தாங்கிகளைச் செய்வான். மேலும் கைப்பிடிகளைச் செதுக்குவான். தொடர்ந்து கைப்பிடி தாங்கிகளையிழைப்பான். அடுத்து, அமருந் தட்டுப் பலகையையும் அமைப்பான். இறுதியிலேயே எல்லாவற்றையும் இணைத்துப் பொருத்துவான். அதற்குப் பெயரே நாற்காலி. அவன் நாற்காலியின் ஒரு காலைத் தவிர மீதி யெல்லாவற்றையுஞ் செய்து விட்டான் இறுதியில் எஞ்சியுள்ள அக்காலைக் கடைந்து கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்போழ்து ஒருவர் அவனையணுகி, ‘என்ன செய்கின்றாய்’ என்று கேட்டால், “நாற்காலி செய்கிறேன்” என்றே அவன் பதில் சொல்வானல்லவா? அல்லது - அவன் இன்னும் நாற்காலியின் எந்த உறுப்புகளையும் செய்யவில்லை; முதன்முதலாக ஒரு காலைக் கடையத் தொடங்கியுள்ளான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஒருவர் அவனை நோக்கி, “என்ன செய்கிறாய்” என்று கேட்டால், அப்பொழுதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/117&oldid=1111519" இலிருந்து மீள்விக்கப்பட்டது