28
வாழும் வழி
தேசப்பற்றுக் கொண்ட செர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் சங்கத்திலிருந்து பிரிந்தன. பிரிந்ததோடு நிற்காமல், உராய்கிற மாடு மேய்கிற மாட்டைக் கெடுத்தாற்போல் பிற நாடுகளின் அமைதியையும் குலைக்கத் தொடங்கின. அன்றியும் சங்கத்தில் சேர்ந்திருந்த பல நாடுகளும் இனிப் படையைப் பெருக்குவதில்லை என்று சங்கத்தில் ஒத்துக்கொண்டு தத்தம் ஊர் சென்றதும், ‘அவன் கிடக்கிறான் குடிகாரன் எனக்கு இரண்டு மொந்தை போடு’ என்ற முறையில் ஏராளமாகப் படைகளைப் பிறர் அறியாமல் பெருக்கி வைத்துக்கொண்டு பத்தினிபோல் பாசாங்கு செய்தன. இது எப்படித் தெரிந்தது? படையைப் பெருக்கக்கூடாது என்ற நாடுகளின் ஒழுங்கு, இரண்டாவது உலகப் பெரும் போரில் தெரிந்துவிட்டதே! அம்மம்மா எவ்வளவு ஆயத்தங்கள்! எவ்வளவு பீரங்கிகள்! எவ்வளவு குண்டுகள், எவ்வளவு தரை-நீர்-வான ஊர்திகள்! இந் நிலையில் நாடுகள் நாளாவட்டத்தில் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறின. முதல் முதல் சங்கத்தின் கட்டுப் பாடுகளை ஃஇட்லர் அவர்களே “போனி” பண்ணினார். 1939-இல் போலந்தைத் தாக்கி இரண்டாவது உலகப் பெரும்போருக்குத் திறப்புவிழா செய்தார். கெடுவான் கேடு நினைப்பான் அன்றோ? இந்நிலையில் சங்கம் பங்கம் எய்தி மயங்கியது. சங்கம் ஒன்றிருந்ததையே மறந்து உலகம் போரில் ஈடுபட்டது. அணுகுண்டு வந்தே ஆண்டுவிழா நடத்தியது. இந்தக் கதி இப்போதுள்ள ஐ.நா.வுக்கும் வராது என்று யார் ஆருடம் சொல்லுபவர்? இப்போது தெரிகிறதா ஐயத்தின் காரணம்?