திருவாசகம் என்பது ஒரு சைவசமய நூல்; தமிழில் மலர் தூவி அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுவதற்கேற்ற ஒரு சிறந்த நூல். இதன் ஆசிரியர் மாணிக்கவாசகர் ஆவார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் என்னும் நான்கு சைவப் பெரியார்களையும் ‘நால்வர்’ என்னும் சொல்லால் விதந்து கூறுவது சைவ மரபு. இந் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகரது அருட்படைப்பே திருவாசகம். தலைசிறந்த சைவப் பெரு நூற்கள் சில, பன்னிரண்டு திருமுறைகளாக வகுத்துத் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் நமது திருவாசகம், எட்டாந் திருமுறையாக அமைந்து போற்றப்பட்டு வருகிறது.
இந்தத் திருவாசகம் என்னும் நூலுக்கு, இதனை எழுதிய மாணிக்கவாசகர் இட்ட பெயர் என்ன? என்பதுதான் இங்கே எடுத்துக்கொண்ட ஆராய்ச்சியாகும். இயற்பெயர் என்பது, முதலில் இடப்பட்ட பெயராகும். ஒரு குழந்தைக்கு முதலில் பெற்றோர் இட்ட பெயர் இயற்பெயராகும். பின்னர் வளர்ந்து பெரியவன் ஆனதும், எத்தனையோ புனைபெயர்களும் சிறப்புப் பெயர்களும் ஏற்படுகின்றன அல்லவா? அதுபோலவே, சில நூற்களுக்கும் ஆசிரியர் வைத்த பெயர் இருக்க, பின்னால் சில சிறப்புப் பெயர்கள் தோன்றுவதும்