பக்கம்:வாழையடி வாழை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8. உவமைக் கவிஞர் சுரதா

 கலை மலிந்த தஞ்சை மாவட்டத்தில், சிங்கார வேலன் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள சிக்கல் நகரையடுத்த பழையனூரில் பிறந்த 'கவிஞர் சுரதா' இராசகோபாலன் என்னும் இயற்பெயர் கொண்டவர். சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் சிறந்த இடங்களில் ஆண்டு, சொல்லாட்சி நிறைந்த கவிதைகள் பல வற்றை இவர் உருவாக்கியிருக்கிறார். உவமைகளை இவர் கையாளும் நயம் இவருக்கே சிறக்கக் கைவந்த கலையாகும். புதிய புதிய உவமைகளைப் பொருட் பொருத்தமுற ஆளுகின்ற சிறப்பால், இவர் 'உவமைக் கவிஞர்' என்று உவகையோடு பலரால் வழங்கப்படுகின்றார்.

இனி, கவிஞர் சுரதா அவர்கள் இயற்றியுள்ள 'தேன் மழை' என்னும் கவிதைத் தொகுதியினைக் காண்போம். பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பதினாறு தலைப்புகளில் கவிஞரவர்கள் சிந்தனை சென்று செய்யுள் வடிவம் பெற்றுப் பாடும் நா மனக்கும் பாக்களாய் வெளிப்பட்டுள்ளன. பாரதியாருக்கு ஒரு தாசர் கிட்டினார்; அவரே பாரதிதாசனார். அவரது இயற் பெயரைத் தம் பெயருக்குமுன் இணைத்துக் கொண்ட சுரதா—சுப்புரத்தின தாசர் ஆவர். இவர் பாவேந்தர் பாதிதாசனார் பரம்பரையினர். ஆயினும், இவர் நெஞ்சாழம் கொண்ட நிறைகவிஞர் என்பதை இவர் தம் முன்னுரையிலேயே காணலாம். "நான் பிறரைப் பின்பற்றி எழுதுவதுமில்லை; பிறர் என்னைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எழுதுவதுமில்லை,' என்கிறார் கவிஞர்.

நூலினிற் புகுந்து 'தேன் மழையில் நனைவோமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/120&oldid=1461292" இலிருந்து மீள்விக்கப்பட்டது