பக்கம்:வாழையடி வாழை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமைக் கவிஞர் சுரதா 123

இத்திறனாய்வுக் கண்கொண்டு காணும் பொழுது இவர் கவிதைகள் சிறப்பு நிறைந்தனவாய்த் துலங்குகின்றன. பின் வரும் பாடலில் உணர்ச்சி கொப்புளிக்கக் காணலாம், சங்க நூல்கள் கடல் கோளாலும் கால வெள்ளத்தாலும், கவனக்குறைவாலும் அழிந்து பட்டதைப் புலவர் பின்வருமாறு உணர்ச்சி பொங்கக் கூறுகின்றார்:

'கத்துகடல் நீராலும் கயவராலும்
கனலாலும் கண்கலந்த தூக்கத் தாலும்
எத்தனையோ நூல்களைநாம் இழந்து விட்டோம்!
இல்லையெனில் ஒரு நூலா, இரண்டு நூலா,
பத்திரண்டா யிரங்கோடி நூல்க ளன்றாே
பைந்தமிழர் கைவசத்தில் இருந்தி ருக்கும்!
வித்திடுவீர்! என்றுரைத்தான் புலவ ரெல்லாம்
விழித்தெழுந்தே செழுந்தமிழை வளர்க்க லானார்.

அடுத்துக் கவிஞரின் கற்பனையைக் காண்போம், 'நெய்தல் நீர்' என்ற கவிதையில் கடலை வருணிக்கின்றார் கவிஞர். காண்போம்:

'ஆதிநீ ரான முந்நீர்
அச்சத்தைக் கொடுக்கும் தண்ணீர்
பாதிநீர் காற்றை மோதும்
பாதிநீர், கரையை மோதும்
சீதநீர்த் துளிகள் எல்லாம்
சிறியகண் ணாடி மீதில்
ஊதிடும் ஆவி போன்று
மறைந்தி டும் உலர்ந்த மண்ணில்,
விண்வெளி, இவ்வை யத்தின்
விரிகுடை! புவியில் வாழும்
பெண்களின் கண்கள் இட்ட
பிச்சையே கடலின் நீலம்!
பண்கடல் உண்டே யன்றிப்
பாற்கடல் இருந்த தில்லை’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/125&oldid=1461297" இலிருந்து மீள்விக்கப்பட்டது