பக்கம்:வாழையடி வாழை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9.கவியரசு கண்ணதாசர்

இன்று பாமரரும் அறிந்த பெருங்கவிஞராய்க் கண்ணதாசர் துலங்குகின்றார். திரைப்படப் பாடல்களை எழுதும் கவிஞர் என்ற அளவில் மட்டும் பலரும் நினைக் கும் இவர், எண்ணவூட்டச் சத்திநிறைந்த கவிதைகள் பலவற்றைப் புனைந்துள்ளார். தத்துவக் கருத்தினை மையம் கொண்டனவாக இவர் பாடல்கள் அமைந்து விளங்கக் காணலாம். 1944ஆம் ஆண்டில் கவிதை உலகிலே காலடி எடுத்து வைத்த கவிஞர், இன்று தமிழ்க்கவிதை வானில் தாரகை என ஒளிவீசித் திகழ் கிறார் சொல்லாழமும் கருத்தாழமும் நிறைந்த இவர் பாடல்கள், இன்பத் தமிழ்க்கவிதைக் களஞ்சியமாகும். சங்க இலக்கியம் முதலாக, இற்றை நாள் இலக்கிய யங்கள் வரை ஆழ்ந்து படித்தவர் கவிஞர் அவர்கள். பழைய பாட்டின் தொடர்கள் இவருடைய கவிதையில் அப்படி அப்படியே வரும். எல்லார் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டு திகழும் கவிஞர், தம் எண்ணத் தைப் பின் வருமாறு கவிதையில் கூறுவர்.


'போற்றுபவர் போற்றட்டும்
        புழுதி வாரித்
தூற்றுபவர் துாற்றட்டும்:
        தொடர்ந்து செல்வேன்!
ஏற்றதொரு கருத்தைஎன (து)
         உள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன்; எவர்வரினும்
         நில்லேன்! அஞ்சேன்!”

இவ்வாறு தம் எண்ணத்தின் வழியே கவிதையினை இயற்றுபவர் கவிஞர் என்பது அவர் எழுதியுள்ள கவிதைகளைக் கண்டு தெளியலாம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/134&oldid=1338775" இலிருந்து மீள்விக்கப்பட்டது