பக்கம்:வாழையடி வாழை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

வாழையடி வாழை

என்று கவிஞர் குறிப்பிட்டுள்ள கூற்றில்தான் எத்துணைக் கருத்தாழம் குடிகொண்டுள்ளது!

காவியத் தலைவி மாங்கனியின் அழகைச் சொல்லிலே வடிக்கிறார் கவிஞர்:


கொலைவாளுக் குறைபோல விழிவாளுக் கிமையும்
      குழையாடுஞ் செவியோடே உறவாடும் அளவும்
சிலையோடும் சமமாக விளையாடும் புருவம்
      சிறுவானப் பிறைமீதில் அலைமோதும் அழகும்
கலைமூடும் எழிலேறும் காண்பார்தம் நெஞ்சம்
      கடல்மீனுக் கிணையாகத் தடுமாறும் நிலையில்
கலைவீசும் உருவேநின் வடிவொன்று போதும்
      வாழ்வார்உன் னோடென்னின் வாழ்வார்எப் போதும்?”

என்று பாவாணன் கூற்றாக மாங்கனிபின் எழில் வெளிப்படுகிறது. அவள் சேரன் அவையில் ஆடு கின்றாள். அவையில் மட்டுமா ஆடுகின்றாள்! அவை யினர் மன அரங்கிலுமன்றாே ஆடுகின்றாள்!


'செந்தமிழ்த் தீம் என்றவளும் ஆடுகின்றாள்;
       'செத்தொழிந்தோம்’ என்றுசிலர் வாடுகின்றார்;
தந்தனத்தான் என்றவளும் தாவுகின்றாள்:
       'தஞ்சமுற்றேன்’ என்றுசிலர் வாடுகின்றார்.'

இவ்வாறு மாங்கனி ஆடும் ஆட்டத்தில் அமைச்சன் அழும்பில்வேள் மகன் அடலேறு சொக்கி நிற்கின்றான்:


'செழுங்கொடியைக் கண்வாங்கி மனத்துட் போட்டு
       சீரணிக்க முடியாமல் நின்றான் ஆங்கே!’

களத்தில் வாள் சுழற்றும் அக்காளே, கன்னியின் கண் சுழற்றலில் ஆட்பட்டு, அலையிடைப்பட்ட துரும்பானான்.


குத்திடுவேல் வாளெல்லாம் களத்திலேதான்
      கோதையர்பால் துரும்பேதான்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/136&oldid=1338925" இலிருந்து மீள்விக்கப்பட்டது