பக்கம்:வாழையடி வாழை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரசு கண்ணதாசர் 135


என்னும் முடிவிற்கு வருகின்றான். 'தலையில் இருக்கும் சுமையையாவது இறக்கி வைக்கலாம்; ஆனால், காதற் சுமையை இறக்குவது எப்படி?’ என்று நெஞ்சம் சோர்ந்தான்:

'தலையிருக்கும் பாரத்தை இறக்கி வைக்க
வழியிருக்குஞ் சாலைதனில்; ஆனாற் காதல்
குலையிருக்கும் நெஞ்சத்தின் பாரமொன்றும்
குறையாதென் றரற்றினான் கொற்ற வீரன்.’

எள்ளளவும் குறையில்லாத அழகுத்தேன் மாங்கனியோ, மதியமைச்சன் மகன் மனம் படும் பாடு அறியாள்.

'வெள்ளை உடை, வெள்ளை உடல், வெள்ளை உள்ளம்
விண்பிலிற்றும் மழைமுகத்தின் ஒளிச்சிரிப்பு!
விள்ளாய கிள்ளை மொழி, பிள்ளைப்போக்கு
மேற்றிசையிற் கதிர்படிந்த சிவப்புநாக்கு
அள்ளுமனக் குயில்மேனி கரிய கூந்தல்
அசையுங்கால் எவ்வுயிரும் அசைந்து காட்டும்!'

இவ்வாறு எழிழரசி கீதம் இசைத்திருந்தாள்.

காதல் முகிழ்க்கிறது. காதல் அரும்பிய இருவர் நெஞ்சும் ஆள் இடம், மாறுகிறது.

சித்திரப்பூ முத்தாரம் சிந்தாமற் சிதையாமல்
கத்தரிப்பூ வண்ணவிழி கலங்காமல் அசையாமல்
சித்துவினை அறியாத சீதளஞ்சேர் கன்னிமுகம்
நத்திஅரு கடைந்து நாமே உலகமென்று

இணைப்புறாக்கள் காதல் வானில் களி கொண்டு பறந்து திரிகின்றன. இன்பமூட்டும் இரவு கழிந்து பொழுது புலர்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/137&oldid=1461304" இலிருந்து மீள்விக்கப்பட்டது