பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 123 பில்கணன் நாடகம் பார்த்தோம். மறுநாள் டி.கே. சண்முகம் என்னை ஏ.எஸ்.ஏ. சாமிக்கு அறிமுகப்படுத்தினார். அவரும் உடனிருக்க, சாமி தனது விருப்பத்தைக் கூறினார். ஜூபிடர் பிக்சர்ஸ் எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் அப்போது கோவையில் இயங்கிக் கொண்டிருந்தது. யுத்த காலம் என்ற வேறு சில திரைப்படக் கம்பெனிகளும் கோவை சேர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன. பில்கணன் கதை ஜூபிடர் பிக்சர்ஸ் படமாகத் தயாரிக்கப்பட இருந்தது. அது ஏ.எஸ்.ஏ. சாமி எழுதியது. அதை அவரே இயக்குவதாகவும் பேசப்பட்டது. அத்துடன் வேறு சில படங்களும் அவரது இயக்கத்தில் தயாரிக்கப்படலாம் என்ற நிலை. மொத்தம் ஆறு படங்கள். ஏ.எஸ்.ஏ. சாமி சொன்னார். பில்கணன் படத்துக்கு வசனம் எழுத நீங்கள் உதவ வேண்டும். மற்றப் படங்களுக்கும் - மொத்தம் ஆறு படங்களுக்குநீங்கள் வசனம் எழுத வேண்டும். உரிய பணம் உங்களுக்குத் தரப்படும். ஆனால், திரையில் கதை-வசனம் ஏ.எஸ்.ஏ. சாமி என்றுதான் வரும். உங்கள் பெயர் வராது. நீங்கள் இதற்குச் சம்மதிப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் சம்மதிக்கவில்லை. அவர் பேரம் பேசிய விதமே எனக்குப் பிடிக்கவில்லை. சாமி மேலும் சொன்னார். இவற்றுக்கு மாற்றாக நான் உங்களுக்கு ஒரு பெரிய உதவி செய்வேன். மதுரை பிலிம் கம்பெனி ஒன்று ரத்னகுமார் என்ற படம் தயாரிக்கிறது. அதற்குக் கதை வசனம் டைரக்ஷன் பொறுப்பும் எனக்குத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்துக்கும் நீங்களே வசனம் எழுதலாம். உங்களுக்குத் தாராளமாகப் பணம் கிடைக்க நான் ஏற்பாடு செய்வேன். திரையில் கதை-வசனம் என்று உங்கள் பெயர் வரவும் உதவுவேன். 'சினிமாவுக்குக் கதை வசனம் எழுதி முன்னேற வேண்டும் என்கிற ஆசை எனக்கு இல்லை. அதனால் உங்கள் உதவியை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று உறுதியாய்க் கூறினேன். 'ஏன்? இது நல்ல வாய்ப்பு. இது மாதிரி வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்காது என்று சாமி கூறினார். 'சினிமா வாய்ப்புகள் எனக்கு வேண்டாம். இலக்கியத் துறையில் தான் எனது நாட்டம் இருக்கிறது. இலக்கியப் பத்திரிகையில் எழுதி வளர்ச்சி பெற வேண்டும் என்பது தான் என் ஆசை என்றேன். 'பத்திரிகை வேலையை நீங்கள் விட வேண்டாம் துறையூரில் பத்திரிகை வேலையைக் கவனிப்பதுடன், அவ்வப்போது இங்கே வந்து சினிமாப் பணியையும் கவனிக்கலாமே? உங்கள் வசதிப்படி வந்து போக நான் ஏற்பாடுகள் செய்வேன்' என்று சாமி ஆசைகாட்டினார்.