பக்கம்:வாழ்க்கை.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56
வாழ்க்கை
 

கொண்டு, அதிலிருந்து எல்லையற்ற வெளியில் எல்லாப் பக்கங்களிலும் விரிந்து பரவும் எல்லையில்லாத பெரிய வட்டமே அவன் இடமாகத் தோன்றுகிறது. அந்த வட்டத்தின் விஸ்தீரணம் எங்கும் இருக்கிறது ; ஓரிடத்திலும் இல்லை. எனவே, காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டு நிற்கும் தன்னையே மனிதன் உண்மையாக அறிகிறான். ‘நான்’ என்ற தன் தன்மையை அறிவதோடு அவனுடைய உண்மையான அறிவு முற்றுப் பெறுகின்றது. இந்த அகங்கார சம்பந்தமில்லாமல் அவன் எதையும் அறிவதில்லை. வெளியுலகப் பொருள்களை மேலெழுந்தவாரியாக ஓரளவுதான் அவன் காண முடியும் ; கண்டு விளக்க முடியும்.

மனிதன் மற்ற மனிதர்களைப் பற்றிப் பூரணமாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில், மக்கள் கோடிக்கணக்காக இருக்கின்றனர். அவன் கண்டும் கேட்டும் இராத எத்தனையோ மக்கள் முற்காலத்தில் இருந்திருக்கிறார்கள் ; இனியும் இருப்பார்கள். எனவே, அவன் தன்னைப் பற்றித் தெரிந்துள்ள அளவுக்கு மற்றையோர்களை அறிந்துகொள்ள இயலாது.

விலங்குகளை எடுத்துக் கொண்டாலோ, அவைகளில் எத்தனையோ ஆயிரம் வகைகள் இருக்கின்றன. மனிதன் மற்ற மனிதர்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டதிலிருந்து, பகுத்தறிவு ஒன்றை மட்டும் நீக்கிவிட்டு, மிருகங்களின் இயல்பு இப்படித்தான் இருக்கும் என்று யூகித்துக்கொள்கிறான். மிருகங்களைப் பார்க்கிலும் குறைவாகவே அவன் தாவரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/63&oldid=1123807" இருந்து மீள்விக்கப்பட்டது