பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 வாஷிங்டனில் திருமணம் போட்டோ என்றதும் சாம்பசிவ சாஸ்திரிகள் வாயிலிருந்த வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு வர ஓடினார். 'ஒய்! கண்ட இடத்தில் வெற்றிலையைத் துப்பக் கூடாது. அமெரிக்காள் பார்த்தால் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள்' என்றார் அம்மாஞ்சி. "என்ன நினைத்துக் கொள்ளப் போகிறார்கள் ஆரத்தி சுற்றிக் கொட்டியிருக்கிறது என்று எண்ணிக் கொள்வார் கள்' என்றார் சாஸ்திரிகள். மிஸஸ் ராக்ஃபெல்லர் எல்லோருக்கும் நடுநாயகமாக நின்று கொண்டாள். அந்தச் சீமாட்டிக்கு இரு பக்கத்திலும் மணப் பெண்ணும் மாப்பிள்ளையும் நின்றனர். ஒரு பக்கம் சம்பந்தி வீட்டாரும், இன்னொரு பக்கம் பெண் வீட்டாரும் நின்று கொண்டனர். ஞாபகமாகப் பிள்ளைக்கு மாமாவை அழைத்துப் பிள்ளையின் பக்கத்தில் நிற்கச் சொன்னாள் மிஸஸ் ராக். மாமாவுக்கு அதில் ரொம்பத் திருப்தி! வசந்தாவும், லோரிட்டாவும் ருக்குவின் பக்கத்தில் நின்றார்கள். குழந்தைகள் கீழ்ப்படியில் வரிசையாக உட்கார்ந்து கொண்டனர். 'லல்லியும் பஞ்சுவும் எங்கே?' என்று திடீரென்று ஒரு குரல் எழுந்தது. 'அவர்கள் இரண்டு பேரையும் ரொம்ப நேரமாகவே காணோம்! எங்காவது ஜோடியாகக் கைகோத்துக் கொண்டு போயிருப்பார்கள். வசந்த காலமோன்னோ? என்று விஷமமாகச் சிரித்தார் அம்மாஞ்சி. அதற்குள் லல்லியும், பஞ்சுவும் தொலைவில் நடந்து வந்து கொண்டிருப்பதைக் கண்ட அய்யாசாமி, “அதோ வருகிறார்களே!' என்றார். அவர்கள் வந்ததும், 'பஞ்ச்! அதுக்குள்ளே எங்கே போயிட்டீங்க? குரூப்லே வந்து நில்லுங்க' என்றாள்