பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

விஞ்ஞானத்தின் கதை

பெற்றன. இத்தகைய நீர் ஏற்றங்களை இன்றும்கூட எகிப்திலும் இந்தியாவிலும் காணலாம்.

இதற்கு அடுத்தபடியாக மழை நீரை மட்டுமே நம்பி இருந்த நிலப் பகுதிகளைக் கவனிப்போம். ஆண்டுக்குச் சில நாட்களே மழை பொழியும் என்று அறிந்து கொண்ட மனிதன் அதைத் தேக்கி வைத்து ஆண்டு முழுதுக்கும் அதைப் பயன்படுத்தச் சில முறைகளைக் கையாண்டான். அவற்றில் ஒன்று குளங்கள் வெட்டி மழை நீரைத் தேக்கி வைத்தது. இதை அடிப்படையாகக் கொண்டு பின்னர் பெரும் அளவுத் தண்ணீரைத் தேக்க ஆற்றின் பாதையில் அணைகள் கட்டப் பட்டன. ஓடும் வழியில் திறந்த வெளியில் வெப்பத்தினால் ஆவியாகி விடாமல் இருக்க இந் நாட்களில் தண்ணீர் ஆற்றிலிருந்து வெகு தூரம்வரை குழாய்களின் வழியாக அனுப்பப்படுகிறது. வேண்டும் இடங்களில் குழாயைத் திறந்து தண்ணீர் பாய்ச்சி வேளாண்மை நடத்தலாம். இத்துறையில் இன்றைய முயற்சி எல்லாம் மழைநீர் கடலில் கலந்து வீணாகாமல் இருக்கச் செய்வதே. இதில், இன்றைய விஞ்ஞானிகள் பெரும் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

தாவர வளர்ச்சியால் வலிவிழந்த நிலத்தை ஆராயப் புகுந்த மனிதன் மண்ணிலிருந்த சக்திதான் தாவர சக்தியாக மாறியதை உணர்ந்தான். ஆனால் இழந்த வலிமையை மீண்டும் எவ்வாறு பெறுவதென்ற வழி மட்டும் அவனுக்குப் புலனாகவில்லை. ஏதும் புரியாது அயர்வு அடைந்த அவன் அதற்கடுத்திருந்த நிலத்தில் பயிரிடத் தொடங்கி, வலிவிழந்த நிலத்தில் தனக்கு