பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேளாண்மை

21

உதவியாக முன்பே பழக்கி வைத்திருந்த நாய், ஆடு, மாடு முதலிய விலங்குகளை அதில் வாழும்படி வைத்தான். அவ் விலங்குகள் கழித்த மலப்பகுதி அந்நிலத்தில் புதைந்து, மக்கி நிலத்தோடு சேர்ந்தது. குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அப்பகுதியில் ஏதேனும் ஒரு விதை விழுந்து செழித்து வளர்ந்ததை அவன் கண்டிருக்க வேண்டும். தொடர்ந்து விதைகளைத் தூவி அதே இடத்தில் வேளாண்மையையும் தொடர்ந்திருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலைதான் உரத்தின் பிறப்பாக இருந்திருக்க வேண்டும். தகுந்த ஆராய்ச்சியின் பின் வலிவிழந்த நிலத்தை வளப்படுத்தப் பற்பல உர வகைகள் உபயோகத்திற்கு வந்தன. நிலத்தின் வேளாண்மை முறையிலும் மாறுதல்கள் செய்யப்பட்டன. முக்கியமாகக் குறிப்பிடத்தகுந்தது மாற்றுச் சாகுபடி முறையாகும். ஆண்டின் ஒரு காலப்பகுதியில் ஒருநிலத்தில் ஒன்றைப் பயிர் செய்தால் அதற்கடுத்த காலப் பகுதியில் அந் நிலத்தில் வேறு ஏதேனும் ஒன்றைப் பயிர் செய்து மண்ணுக்குப் புதுத்தென்பைப் பெருகச்செய்வதே இம்முறை. கிராமங்களோடு தொடர்புகொண்டிருக்கும் எல்லோருக்கும் இந்நாளில் இம் முறையின் விளக்கம் தெரியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய, சீன உழவர்கள் அனுபவ முத்திரைகளைத் தங்கள்மீது பொறித்துக்கொண்டு இப்படி அறிவில் முன்னேற்றம் கண்டார்கள். ஆனால் நிலத்தில் ஏன் வளம் குறைந்த தென்றும், எப்படி வளத்தை மீண்டும் பெறலாமென்றும் அண்மையில்தான் தெளிவாயிற்று.

விஞ்ஞான யுகத்தின் தொடக்கத்திற்குப் பின் வேளாண்மையின் நிலை என்னவென்பதைச் சற்று ஆராய்வோம்.