பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. முதல் கிராமம்

வேளாண்மையை ஆதாரமாகக்கொண்டு நாகரிகம் எனும் குழந்தை விழித்ததாக அறிந்தோம் அல்லவா? நாகரிகம் வளரத்தொடங்கியது உணவைப் பயன்படுத்திக்கொண்ட பின்புதான் என்பதை இப்போது ஆராய்வோம். "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று உயர்ந்த நோக்கம் கொண்டு ஆதிகால மனிதன் வாழ்ந்தானா? இல்லை. தன் குட்டியைத் தானே உணவாகக் கொள்ளுமாமே முதலை, அதைப்போல மனிதனும் ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது.

நிலத்தில் விளைந்த தாவரங்களை உணவாகக் கொள்ளத்தொடங்கிய காரணத்தால் அந்நிலைக்குத் தகுதியான இருப்பிடத்தை மனிதன் நிச்சயித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அனுபவம் மூலமாக, ஆற்றோரம் குடியேறுதல் சாலச் சிறந்ததெனக் கண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். விலங்குகளைக் கொன்று தின்னும்போது தனி வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் வேளாண்மை தொடங்கிய பின் கூட்டு வாழ்க்கையின் தேவை ஏற்பட்டது. குளம் வெட்டுவதோ,ஆற்றிலிருந்து நிலப்பகுதிக்கு வாய்க்கால்கள் அமைப்பதோ தனியொரு மனிதனால் ஆகக் கூடிய காரியமல்ல என்பதை உணர்ந்தே ஒவ்வொருவனும் தனிமை நீக்கி மற்றவனுடன் சேர்ந்து அங்கங்கே குழுக்கள் தோன்றும் சூழ்நிலையை அமைத்தான்.