பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. பயணம்

வேளாண்மை தொடங்குவதற்கு முன் மனிதனின் இருப்பிடம் நிலையற்று இருந்ததை முன்னரே கண்டோம். பருவக் கோளாறுகளுக்கும், எதிரிகளான காட்டுவிலங்குகளுக்கும் தப்பி உயிர் வாழும் எண்ணத்தால் மனிதன் நாடோடி வாழ்க்கையை மேற்கொள்ள நேரிட்டது. வயிற்றுக்கு உணவு ஒரே இடத்தில் கிடைக்காததும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம். இப்படி இடம் விட்டு இடம் பெயர்ந்து பயணப்படுதல் மனித வாழ்வின் தொடக்க காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது.

ஆற்றோரங்களில் குடிசைகளை அமைத்துக் கொண்டு பயிர்த் தொழில் செய்து நிலையான வாழ்க்கையை மேற்கொண்ட பின்னும் தொலைவில் இருந்த நகரத்திற்குச் சென்று வரவும், சேகரித்து வைத்திருக்கும் பண்டங்களைக் கொடுத்துவிட்டு வேறு பண்டங்களைப் பெற்றுக்கொள்ளச் சந்தைக்குச் சென்று வரவும் மனிதன் பயணப்பட வேண்டியிருந்தது. அப்படிப் பயணப் படும்போது முதலில் தன்னுடன் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களைத் தானே சுமந்து சென்றான். ஆனால் பொருளின் சுமை அதிகப்பட்டபோது அதைச் சுமக்க ஒரு சில காட்டு விலங்குகளை வேட்டையாடி, அடிமைப்படுத்தித் தன் விருப்பத்திற்கு ஏற்பப் பழக்கி, தன் உதவிக்கெனப் பயன்படுத்திக் கொண்டான். தரை வழிப் பயணம் இப்படிப் பல காலம் தொடர்ந்தது.

அடுத்து நிகழ்ந்த ஓர் அரிய சாதனை மனிதனைப் பெரும் அறிஞனாக மாற்றிற்று. மரத்தின் அடிப்பகுதியை