பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயணம்

65

வந்தபின் அதன் இணைப்பால் லாங்லி விமானம் ஒன்றை உருவாக்கி தரையிலிருந்து அரை மைல் தொலைவில் பறந்தார். ஆனால் அதற்குமேல் வெற்றிகாண அவரால் இயலவில்லை. கி. பி. 1896-இல் லிலியேந்தல் என்பவர் தன் விமானத்தில் பறந்தபோது பரிதாபமாகக் கொல்லப்பட்டார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வானில் பறக்கும் முயற்சி முழு வெற்றிகண்டது. இன்று மனிதன் கவலையில்லாமல் வானத்தில் பறக்கக் காரணமாயிருந்தவர்கள் இருவர். அவர்கள் ரைட் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆர்வில் ரைட், வில்பர் ரைட் என்பவர் ஆவர். இன்று அநேக நவீன வசதிகளுடன் விமானம் பறந்து சென்று கொண்டிருக்கிறது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் விளைவாக ஜெட் விமானங்களும், ராக்கெட்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை மணிக்கு ஆயிரம் மைல்கள் வீதம் பறக்கின்றன. விமானங்களின் மூலமாக வானத்துக் கோள்களிடையே மனிதன் பயணம் செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை.

மனிதன் பயண வேகம் அதிகப்பட்டால் மட்டும் போதுமா? பயணத்தின்போது வசதி வேண்டுமல்லவா? இத்துறையும் அவ்வப்போது சீர்திருத்தப்படுகின்றது. ஆகாயவிமானம் குறுகிய நிலப் பரப்புக்குள் இறங்கவோ ஏறவோ முடியாது. இக்குறைகளை ஈடு செய்ய ஹெலிகாப்டர் என்னும் புதிய விமானம் இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது வானத்தில் நிலையாக நிற்கும்; வீட்டு மொட்டைமாடியில் இறங்கும். வானத்தில் நிற்கும்போது இறக்கப்படும் கயிற்றேணிகள்

5