பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

143


ஏறக்குறைய, இரண்டாண்டு காலமாக அவர்கள் கடுமையாக உழைத்துழைத்து, நோயுற்று, நோயுற்று, மீண்டும் உழைத்து ஆராய்ச்சிச் செய்தார்கள்.

அதன் பலன், புதிய தனிமத்திற்குத் தனது தாய் நாட்டின் பெயராகிய ‘போலோனியம்’ என்ற பெயரையே சூட்டினர்.

போலோனியம் கண்டுபிடித்தப் பிறகும்கூட அவர்களது ஆராய்ச்சி வேட்கை தணியவில்லை, மீண்டும் கடுமையாக, ஆனால் படிப்படியாகச் சோதனைகளைச் செய்து கடுகினும் சிறியதான, கதிரியக்கத் தன்மையுள்ள தனிமத்தைக் கண்டு பிடித்தார்கள்.

அந்தக் கதிரியக்கத் தனிமத்திற்கு ‘ரேடியம்’ என்ற பெயரை வைத்தார்கள். இன்று நாம் புற்று நோய்க்கு ரேடியம் சிகிச்சை தேவை என்று கேட்கிறோமே, அந்த ரேடியத்திற்கு வழிகாட்டியவர்களே மேரி கியூரி தம்பதிகள்தான்.

ரேடியம் ஒரு விசித்திரமான உலோகம் - விந்தையான தனிமம். யுரேனியத்தின் கதிர்வீச்சு ஆற்றலைப்போல் பத்து லட்சம் மடங்கு கதிர் வீகம் ஆற்றல் மிக்கப் பொருள் அது.

வாயு மண்டத்திலே உள்ள வாயுக்களின் மூலக்கூறுகளை ரேடியம் அயனிகளாக மாற்றுகிறது. அதாவது, மின்சாரத்தைச் சுமந்து செல்லும் தன்மையுடையவையாக அவற்றை மாற்றுகிறது.

ஒளியைச் சிறிதும் உட்புகாமல் ஃபிலிமை மூடி வைத்திருந்தாலும்கூட அதைக் கெடுத்துவிடும் ஆற்றல் பெற்றது ரேடியம்.