பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


மருத்துவ மா மேதைகளான ஹிப்பாக்கரட்டீஸ், கேலன், ஆண்டிரியஸ் வெசேலியஸ் போன்றவர்களுடைய மருத்துவக் கருத்துக்களை எல்லாம் மதிக்காத மடையன் இவன் என்று சிலர் ஆர்வியைக் கேலியும் கிண்டலுமாக ஏசிப் பேசி வந்தார்கள்.

டாக்டர் வில்லியம் ஆர்வியின் அரிய கண்டு பிடிப்பை எவரும் ஏற்க மறுத்து விட்டனர். எதிர்ப்புகளை எழுப்பினர். எங்கே தவறுகள் கிடைக்கும் என்றே துருவித் துருவி அந்தக் கண்டு பிடிப்புகளைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.

‘பைத்தியக்காரன்’, மனிதனுடைய இதயத்தை ஆராய்கிறானாம்! இதயமும் - மர்மமும், இறைவன் மனித இனத்துக்குத் தந்த அற்புதப் படைப்பு அதைப் போய் ஆராய்கிறானாம்? யார் இவன் - இதைப் பற்றி சிந்திக்க? என்ற கேள்வி அம்புகளை ஆர்வி மீது வீசியபடியே விலா நோகச் சிரித்தனர்!

மனித உடலுக்குள்ளே இரத்தம் எப்படி ஒடுகிறது என்ற மர்மத்தை ஆராய்ந்து கூறிய அறிவுக்கரசனை, அரைப் பைத்தியம், செமிகிராக் என்றெல்லாம் அறிவியல் உலகமே ஏசிற்று.

அதோடு மட்டுமா விட்டனர் அவரை? அவரது கண்டு பிடிப்புகளின் புகழை எவ்வாறெல்லாம் கறைப்படுத்த முடியுமோ அவ்வாறெல்லாம் இழிவுபடுத்தினர்!

ஆர்வி, மேற்கொண்டு ஆராய்ச்சிகளிலே ஈடுபடாதவாறு தடையாக நின்று கீழறுப்பான் வேலைகளைச் செய்தனர் - சில பொறாமை மனோ பாவம் பிடித்த மருத்துவத் துறையினர்.