உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

23

வசூலில் சர்க்காருக்கு சேரவேண்டிய மகசூல்தானியத்தை அளந்த பிறகும், எஞ்சியுள்ள மிகுதி தானியத்தை, ஊரில் உள்ள அத்தனை குடிகளுக்கும் பங்கிட்டு கொடுத்து அதன் மதிப்பை அவர்களிடமிருந்து வசூலிக்கும் குடியம்' என்ற முறையையும், அவர்கள் மேற்கொண்டனர்.[1] நிர்வாகப் பிரிவுகள் தாலுகா, கஸ்பா என வரையறுக்கப்பட்டன. அன்றாட நிர்வாகத்திற்கு. இசுலாமிய ஹிஜிரி ஆண்டு முறையும், அரசின் வரவு செலவிற்கு பாரசீக பசலி ஆண்டு முறையும் கையாளப்பட்டன. அதுவரை செலாவணியிலிருந்து சேதுபதிகளது சொந்த நாணயமும், டச்சுக் காரர்களது போர்ட்டோ நோவோ பக்கோடா என்ற நாணயமும் புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டு ஆற்காட்டு வெள்ளி ரூபாய்ப் பணமும், கும்பெனியாரின் ஸ்டார் பக்கோடா என்ற நாணயமும் அரசுச் செலாவணிக்குக் கொண்டு வரப்பட்டன. இவைகள் எல்லாம் சாதாரண மக்களுக்கு குழப்பத்தையும், நடைமுறையில் பல சிரமங்களையும் ஏற்படுத்தின. புதிய ஆட்சியாளர் மீது அருவருப்பும் பகைமையும் கொள்வதற்கு அவை உதவின. சீமை முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை நிலவியது.

இவைகளினால் பொறுமையிழந்த குடிமக்கள் பல பகுதிகளில் நவாப்பின் அலுவலருடன் சச்சரவிட்டு கை கலப்பில் ஈடுபட்டனர். வன்முறைகள் வளர்ந்தன. இயல்பாகவே போர்த் திறன் படைத்த மறவர்கள் சிறிய துப்பாக்கிகளையும், வாளையும், வேலையும் கொண்டு, அவர்களுக்கு தொல்லைகள் தந்த நவாப்பின் கூலிப்படையினரை ஆங்காங்கு எதிர்த்து மோதினர்.[2] அந்நியரின் ஆட்சியில் வரி வசூல் கொடுமை எந்த அளவிற்கு பரிணமித்து நின்றன என்பதை, இந்த மக்கள் கிளர்ச்சிகள் கோடிட்டுக் காட்டுவனவாக இருந்தன. இதேபோல, நெல்லைச் சீமைப் பாளையக்காரர்களை அடக்குவதில் முனைந்த ஆற்காட்டுப் படைகளும், ஆங்கிலக் கூலிப்படைகளும், பாஞ்சாலங்குறிச்சி, சிவகிரி, கொல்லங்கொண்டான் ஆகிய பாளைய பட்டுக்களில் அடைந்த தோல்வி மறவர் சீமையிலும் நவாப்பின் ஆதிக்கத்தை நீக்கிவிட இயலும் என்ற நம்பிக்கையை சாதாரண மக்களிடம் வலுப்பெறச் செய்தது. அண்மைப் பகுதியான சிவகங்கைச்


  1. Madurai D1. Records, Vol. 1103, pp. 18-25.
  2. Rajayyan, Dr. K. History of Madurai (1974), p. 266.