உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்து அரசுகள்

23


தைக் காங்கிரஸ் உணர மறுப்பது ஏனோ ! யார் மறுத்தாலும் இந்தக் கிளர்ச்சி அடங்கிவிடப் போவதில்லை. அறிவாளிகள், இந்தக் கிளர்ச்சிபற்றி அலட்சியமாக இருந்துவிடவும் முடியாது. "பாகிஸ்தான் பிரிட்டிஷாரால் தரவும் முடியாது முஸ்லீம்கள் அடையவும் முடியாது" என்று முப்புரிதரித்த முதியோர் ராமஸ்வாமி சாஸ்திரி முதல் புத்தர் அவதாரமென்று சொல்லும் வார்தா முனிவர் உள்பட சொன்னார்கள். மறுத்தார்கள். காலப் போக்கையும் கருத்து வளர்ச்சியையும் உணர மறுக்கும் உன்னதமான உரிமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

பல பல ஆண்டுகளுக்கு முன்பு "எதிரி எப்படி வருவான், எடுத்து வீசு துளசியை எங்கும்" என்று கூறினாராமே தஞ்சை மன்னனுக்கு ஒரு கனபாடி, அந்த வாழையடி வாழையாக வந்த திவான்பகதூருக்கு இத்தகைய உரிமை நிச்சயம் உண்டு! கிடக்கட்டும், விழியிருந்தும் வழி தெரியாத இத்தகைய வித்தகர்கள் ஒருபுறம்!

நமது கிளர்ச்சிக்குரல், உள்நாடு, வெளிநாடுகளிலும் கேட்குமாறு செய்யவேண்டும். எந்தத் திட்டம் வந்தாலும், எத்தனை அரசுகள் அமைக்கப்பட்டாலும், இயற்கை சரிதம், இனப் பண்பு, இலக்கியம், இன்றைய நிலைமை முதலிய எந்த ஆதாரத்தைக் கொண்டு அரசுகள் அமைப்பதானாலும், நர்மதை ஆற்றங்கரையிலிருந்து கன்னியாகுமரி வரையிலே, 'திராவிடநாடு' அமைக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.