உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

விடுதலைப் போர்


தலைக்கு மறுமலர்ச்சிக்கு, இன எழுச்சிக்கு, அந்த அறிவைத் துணைக்கொள்ளும் திறனும் அவரிடம் இருப்பதால், அந்தத் திறமை கஷ்டநஷ்டமெனும் சாணையிலே தீட்டப்பட்டுக் கூராக்கப்பட்டிருப்பதால், அந்த ராமசாமியால், தமிழர்மட்டுமே ஒரு தேசத்தை ஆளமுடியும் என்று தைரியமாகக் கூறமுடிகிறது ! அந்த ராமசாமியும், ஏடுதாங்கியாக இருந்திருப்பின், நாடு ஆள்வது என்பதற்காகக் கூடு விட்டுக் கூடு பாய்வது அரசியல் யூகம் என்று கொண்டிருப்பார், கனமாகி இருப்பார், ஆனால் இனம்மெலிந்து போயிருக்கும். துரைமாரின் தயவைத் தேடுபவராக இருந்தால் ஒரு சர் ஆகியிருப்பார், ஆனால் இனவிடுதலைக்கான எழுச்சி ஏற்பட்டிராது. அவர் கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான், அரசியல் என்றால் பஞ்சாயத்து போர்டிலிருந்துதுவங்கிப் பாராளும் மெம்பராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர்மிகுந்த காரியத்தில் இறங்கினார். அவருக்கு நிச்சயமாகத்தைரியம் இருக்கிறது, வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று ! அவர், ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை, தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை. தமிழன் ஒருநாட்டுச் சொந்தக்காரன், இன்று அந்த இடம் சந்தையாகி விட்டது ! தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன், இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு ஆரிய அடிமையாக உழல்கிறான் ! ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு