உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமுகம்

53


நாம் இங்கே "ஆடு ராட்டே" பாடினால், வாட்டம் ஓடுமா?

நம்நாட்டு 'முதல்' பர்மா போய்விட்டதே; நம் நாட்டு மக்கள் தூரக்கிழக்குத் தேசங்களிலே கூலிகளாகித் துயர் உறுகிறார்களே ! இங்கு 'பனியா படை எடுப்பு' நடந்ததே; இந்த நிலை வளர வளர, நாட்டின் சீரும் சிறப்பும் நசித்துப் போகாதா? நாடு நசிவதைப் பார்த்துக்கொண்டிருப்பதுதானா, நாட்டு மக்கள் மடமை ? நாதியற்ற திராவிடமாகத்தானா, திராவிடம் போய்விட வேண்டும்?

பிளவு கேடு பயப்பது ! பிரிவு அக்கேட்டைப் போக்கக் கூடியது. இந்தியாவிலே பிளவுகள் உள்ளன. பிளவுகளின் கேட்டினாலேயே பிரச்னைகள் பலவும் தீர்க்க முடியாததாகிவிட்டன. எங்கெங்கு, தனித்தனி பிரிவுகள், தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய, தன்னாட்சி நடத்தக்கூடிய பிரிவுகள், அமைக்க முடியுமோ, அவ்விடங்களிலே தனி நாடுகள் அமைத்து விட்டுப், பிறகு, அந்தந்த நாடுகள், தத்தமது காரியத்தைத் தானாகக் கவனித்துக் கொள்ளும் ஏற்பாடு இருந்தால், ஏன் பிறகு, இந்த நாடுகளுக்குள் ஓர் தோழமை உண்டாகக்கூடாது! தோழமை, சமபலமுள்ள இருவருக்குள் தானே இருக்கமுடியும் ! சுரண்டும் பாகம் சுரண்டப்படும் பாகம் இரண்டும் ஒன்றாகவே இருக்கவேண்டுமானால், தொல்லையும் துயரமும், துவேஷமும் வளருமேயொழிய, தோழமை எங்கிருந்து முளைக்கும்?

ஐரோப்பாவிலே உள்ள தனி நாடுகளெல்லாம் கூடி, ஐரோப்பா ஒரு நாடு, நாம் யாவரும் ஒரே-