பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குழந்தையின் குதூகலம்

151

அதற்கு அடுத்த நாள்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் விடிந்ததும் விடியாததுமாகத் தன் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டு வேலைகளில் இறங்கியிருந்தாள் மணியின் தாயார். மணி வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான்.

"அம்மா பூச்சாண்டி வந்து என்னைப் பிடிச்சுக் கிட்டானே!” என்று திடீரென்று அவன் வாசலிலிருந்த படியே அலறியதைக் கேட்டதும். “ஐயோ! என்னடா, கண்ணு!” என்று கதறிக் கொண்டே தாயார் வாசலுக்கு ஒடோடியும் வந்தாள்.

முகத்தில் தாடியும் மீசையும் வளர்ந்து, பார்ப்பதற்கு விகாரமாயிருந்த ஒரு தரித்திர உருவம் மணியை ஆசையுடன் கட்டிப்பிடித்துத்துக்கிக் கொண்டிருந்தது.

மணியைப்போல் அவன் தாயாரும் அந்த உருவத்தைக் கண்டு பயந்துவிடவில்லை; முக மலர்ச்சியுடன், "அவர் தாண்டா, உன் அப்பா!" என்றாள்.

"நிஜமாவா, அம்மா என் அப்பாவா, அம்மா!" என்றான் குழந்தை ஆச்சரியத்துடன்.

“ஆமாண்டா, ஆமாம்!’ என்றாள் அவள்.

"அப்படின்னா, இனிமே நான் அப்பாவோடே சினிமாவுக்குப் போவேன், ஹோட்டலுக்குப் போவேன், 'பீச்'க்குக் கூடப் போவேன்" என்று பொங்கி வந்த சந்தோஷத்தில் அடுக்கிக் கொண்டே போனான்மணி.

மாணிக்கம் பிள்ளை அவனுடைய சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. "அந்தப் பாவிதான் எனக்கு வயசாயிடுச்சுன்னு என்னை வேலையிலிருந்து தள்ளிட்டானே!" என்றார் இரண்டு சொட்டுக் கண்ணிரை உதிர்த்துக் கொண்டே.

“என்ன!" என்று திடுக்கிட்டுக் கேட்டாள்.அவருடைய மனைவி.

“ஆமாண்டி, ஆமாம்!” என்றார்.அவர் அலுப்புடன்.

"இதான் விசயமா, கொஞ்ச நஞ்சம் பணம் கூடக் கொடுக்கலையா?” என்று கேட்டாள் அவள்.