பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

விந்தன் கதைகள்

கூடைக்காரர்கள் நினைத்துக் கொள்வதற்குக்கூட வழியில்லாமல் தரித்திரம் அவர்களைத் தொலைத்து விடும்- பிழைப்பே போய்விட்டால்.... பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழி?

* * *

அன்று அம்மாயி வழக்கத்துக்கு விரோதமாகக் கொஞ்சம் நேரம் கழித்து வந்தாள். எப்பொழுது போனாலும் ‘தர்மராஜா' இல்லை என்று சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை அவளுக்கு -ஆமாம், நாயுடுகாருவிடம் கடன் வாங்கும் அங்காடிக் கூடைக்காரர்கள் அத்தனை பேரும் அவரை ‘தர்மராஜா' என்றுதான் மனமார வாயார வாழ்த்தி வந்தனர்.

‘தர்மராஜா' என்பதற்காக எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் நாயுடுகாரு சும்மா இருக்க முடியுமா, என்ன? சரக்கு மோசமா யிருந்தாலும் செட்டியார் மிடுக்காக இருக்க வேண்டாமா? ஆகவே "ஏன் இவ்வளவு நேரம்? நீ வரவில்லை என்பதற்காக நான் காத்துக் கொண்டிருக்க வேண்டுமோ" என்று அம்மாயியைக் கொஞ்சம் அதட்டிக் கேட்டார்.

"பக்கத்து வீட்டுக்காரம்மா எங்கேயோ போயிருந்தாங்க, சாமி அவங்க வந்ததும் என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுவிட்டு வரலாம்னு காத்துக்கிட்டு இருந்தேன். அதனாலே கொஞ்சம் நேரமாயிடுச்சிங்க" என்றாள்.அம்மாயிகையைப் பிசைந்து கொண்டே.

"உன் குழந்தைகளை யாராவது பார்த்துக் கொள்ளாவிட்டால் அவர்களைப் பருந்து வந்து தூக்கிக் கொண்டு போய் விடுமாக்கும். இவ்வளவு நேரம் கழித்து வந்திருக்கிறாயே, இனிமேல் என்னத்தை வாங்கி விற்று எப்பொழுது தண்டல் கொண்டு வந்து கட்டுவது?-உங்கள் பேரில் குற்றம் சொல்லிப் பிரயோசனம் இல்லை; என்னைச் சொல்ல வேண்டும். நல்லதுக்குக் காலமா, இது? போனால் போகிற தென்று புண்ணியத்துக்கு என் வீட்டுப் பணத்தைக் கொடுத்தால், அதை நேரத்தோடு வந்து வாங்கிக் கொண்டு போகக் கூடாதோ?”

"அட, நீங்கள் பணம் கொடுப்பதில் புண்ணியம் வேறு இருக்கிறதா என்று அம்மாயி கொஞ்சமாவது ஆச்சரியப்பட வேண்டுமே?" இல்லவே இல்லை. அதற்குப் பதிலாக, “நான் எம்மா நேரம் கழிச்சு வந்தா உங்களுக்கு என்னா சாமி? எப்படியாச்சும் சாயந்திரம் உங்களுக்குத் 'தண்டல்' வந்து சேர்ந்துவிடும்" என்றாள் அவள்.