பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்ன பாவம் செய்தேன்?



னக்கு உலகம் இன்னதென்று ஒருவாறு தெரிந்த பிறகு, என் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் ஆரம்பமாயிற்று. அப்போதுதான் என் தந்தைக்குப் பாரமாயிருப்பதை நான் ஓரளவு உணர்ந்தேன்.

வேலையிலிருந்து வீடு திரும்பியதும், "ராஜினி, ராஜினி!" என்று இரைவார் என் அப்பா. அந்தக் குரலில் தேனின் இனிமையும் பாலின் சுவையும் கலந்திருப்பது போல் எனக்குத் தோன்றும்.

அக்கம் பக்கத்து வீடுகளில் என் அன்புக்குகந்த தோழர்-தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நான், அதைக் கேட்டு ஓடோடியும் வருவேன்.

அன்புடன் என் கன்னத்தைக் கிள்ளி, ஆசையுடன் என்னைத் தூக்கிக் கொண்டு, வீட்டுக்குள் நுழைவார் என் அப்பா.

அங்கே விதவிதமான பட்சன வகைகளெல்லாம் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். எல்லாம் எனக்கென்று என் அப்பா வாங்கி வந்தவைதான். அவற்றையெல்லாம் ஒருவாறு தீர்த்துக் கட்டுவதற்கும், “காப்பி கூடச் சாப்பிடாமல் இத்தனை நாழி எங்கே போயிருந்தாயாம்?" என்று அம்மா என்னைச் செல்லமாகக் கடிந்த வண்ணம் காப்பி கொண்டு வருவதற்கும் சரியாயிருக்கும். அதையும் குடித்து வைத்த பிறகு, அம்மா என்னைத் தன் மனதுக்குப் பிடித்த மாதிரி அலங்காரம் செய்து வைப்பதில் முனைவாள்.

ஒரு நாளாவது எனக்கென்று ஏதும் செய்து கொள்ள என்னை விடுவதில்லை என் அம்மா. உயிரற்ற என் விளையாட்டுப் பொம்மைகளில் என்னையும் ஒன்றாக அவள் எண்ணி விட்டாளோ என்னமோ! இல்லையென்றால், என் முகத்தை நானே அலம்பிக் கொள்ளக் கூடவா அவள் என்னை விடமாட்டாள்?

அம்மாவின் லட்சணம்தான் இப்படியென்றால், அப்பாவாவது அதற்குக் கொஞ்சம் விரோதமாயிருக்கக்கூடாதோ? அதுவும் இல்லை. அவரிடம் நான் ஏதாவது என்னைப் பற்றிச் சொல்ல வாயெடுத்தால் போதும், “உனக்கெதற்கு, அந்தக் கவலையெல்லாம்!" என்று கேட்டு, எல்லாக் கவலைகளையும் தன் தலையிலேயே போட்டுக் கொள்வார்.

“எதற்கும் நான் ஏதாவது ஒரு தொழிலுக்குப் படித்து வைக்கிறேனே, அப்பா" என்றால், "குழந்தையும் குட்டியுமாகக்