பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய விரோதி

229

தலை என் புழக்கடையிலே கிடந்து உருளும் ஆமாம் 'கபர்தார்!' என்று ஒரு தடவை ரெண்டு தடவையில்லே, ஆயிரந்தடவை சொல்லித்தானே கொடுக்கிறாரு?”

"புழக்கடையிலே தலை கிடந்து உருளும்னா அவரு என்ன, இந்த ஊருக்கு ராசாவா?" என்று கேட்டான் நல்லமுத்து.

"சங்கதி தெரியாதுபோல இருக்குது போன வாரம் அவரு வீட்டுப் புழக்கடையிலே புதுசா ஒரு கிணறு தோண்டினாங்களாம். தோண்டத் தோண்ட ஒரே மனுசனுங்க மண்டையும் எலும்புமா வந்ததாம்! அத்தனை பேரை அவரு அக்கம் பக்கம் தெரியாம தீர்த்துப்பிட்டு இருக்காரு, தெரியுமா?" என்றான் பேச்சிமுத்து.

இதைக் கேட்டதும் நல்லமுத்துவுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்துவிட்டது. அவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

இசக்கிமுத்துவுக்கு அவன் சிரித்தது பிடிக்கவில்லை. "உனக்கு எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கும்" என்றான் அவன்.

"நீ கூடவா அண்ணே, அதை நம்பறே? விசயம் என்னான்னா, அவரு வீடு இருந்த இடத்திலே முன்னே இடுகாடு இருந்ததாம். அதுதான் அந்த இடத்திலே எங்கே தோண்டினாலும் மனுசனுங்க மண்டையும் எலும்புமா கெடைக்குதாம் இப்போ தெரியுதா, எது நிசம், எது பொய்ன்னு?" என்று சட்டென்று ஒரு 'கதை'யைக் கட்டி விட்டுவிட்டு, நல்லமுத்து மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தான்.

"உனக்கு எப்பொப் பார்த்தாலும் இந்த விளையாட்டுப் புத்திதான், அண்ணே! வாயை மூடிக்கிட்டுப் பேசாம வா; வீட்டுக்குப் போவோம்" என்று சொல்லிக் கொண்டே இசக்கிமுத்து நடையைக் கட்டினான். நல்லமுத்து அவனைப் பின்தொடர்ந்தான் பேச்சிமுத்தும் அவர்களைத் தொடர்ந்து பின்னால் நடை நடந்து சென்றான்.

** *

மறுநாள் மாலை கிராம வீடுகளில் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பொழுது தான் புகைய ஆரம்பித்திருந்தது. அவ்வாறு புகைய ஆரம்பித்திருந்த குடிசைகளுக்கு முன்னால் பசியை மறக்கப் புழுதியில் புரண்டு விளையாடிவிட்டு வந்த குழந்தைகள், குதித்துக் கைகொட்டிக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தன. அன்றிரவு நிச்சயம் சோறு கிடைக்கும் என்ற நம்பிக்கை அந்தக்