பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

விந்தன் கதைகள்


அரங்க நாதனின் வீடு நெருங்கிற்று. முன்னிருந்தகளை இப்போது அந்த வீட்டிற்கு இல்லை; பட்டப் பகலிலேயே இருளடைந்து கிடந்தது. உள்ளே நுழைந்தேன். கலகலப்பே யில்லை; வெறிச்சென்றிருந்தது. அவருடைய மூத்த குமாரனான விநாயகம் மட்டும் சோகமே உருவாய்க் கூடத்தில் உட்கார்ந்திருந்தான்.

என்னைக் கண்டதும் அவன் கண்களில் துளித்த நீரைக் கைக்குட்டையால் துடைத்து விட்டுக்கொண்டே, ‘வாருங்கள்’ என்றான். அவனுடைய கையை அனுதாபத்தோடு பற்றி, ‘அழாதே, விநாயகம் அவன் விருப்பம் அப்படியிருந்தால் அதற்கு நாம் என்ன செய்யலாம்?’ என்று நான் அவனுக்கு நம் வழக்கத்தை யொட்டி வானத்தைக் காட்டினேன்.

அவன் அதைப் பார்த்து விட்டு ஆளை விடாமல், "ஒரு விஷயம் கேளுங்கள்" என்னிடம் அவர் எதைச் சொன்னாலும் மற்றவர்களைப் போல் நான் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்வதே இல்லை. இல்லாத விதண்டாவாதமெல்லாம் செய்வேன். அவர் கொஞ்சமாவது கோபித்துக் கொள்வார் என்கிறீர்களா? மாட்டவே மாட்டார்; குலுங்க குலுங்கச் சிரித்துக் கொண்டே 'டேய், விநாயகம் உனக்கு வாதம் செய்வதில் நல்ல திறமை யிருக்கிறது; நீ வக்கீல் வேலைக்குத்தான் படிக்க வேண்டும்' என்பார். நானும் இப்போது படிக்கும் பிஏயை முடித்ததும் அப்படியே படிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். என்னுடைய எண்ணத்தில் மண்ணைப் போட்டு விட்டு அவர் போயே போய்விட்டார் என்றான்.

இந்தச் சமயத்தில் அங்கே வந்த விநாயகத்தின் பாட்டி, ‘இத்தனை நாளா எங்கேடாப்பா, போயிட்டே. அத்தனை சிநேகமாயிருந்து, கடைசியா ஒரு முறை அவன் முகத்தைப் பார்க்கக் கூட நீ கொடுத்துவைக்கலையே, உங்க வீட்டுக்கு ஆளைக்கூட அனுப்பி வைத்தோம். நீ ஊரிலேயே இல்லையாமே!...ம்.... என்னவோ, 'அவர்'தான் என்னை அமங்கலியாக்கிட்டுப் ‘போறேன்’னு போய்விட்டாரே, இவனாவது என்னை எடுத்துப் போட்டுவிட்டுப் போவான்னு பார்த்தேன்; பாழும் தெய்வம் மோசம் பண்ணி விட்டது என்று இல்லாத தெய்வத்தின் மேல் பழியைப் போட்டுக் கொண்டே அவள் தன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டாள்.

தர்ம சங்கடமாகப் போய்விட்டது எனக்கு. எழுந்து நின்றேன். எதிர்த்த அறையிலிருந்து விநாயகத்தின் தாயார் என்னைக் கண்டதும்