பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுற்றமும் நட்பும்

241


'கோ'வென்று கதற ஆரம்பித்து விட்டார். அவர் ஆணாயிருந்தாலும் ‘அட அது கிடக்கு விட்டுத் தள்ளப்பா இது போனால் இன்னொன்று... 'ஜம்' மென்று கல்யாணம் செய்து கொண்டால் போச்சு என்று ஊர் வழக்கத்தை யொட்டி உற்சாகப்படுத்தியிருப்பேன். என்னுடைய துரதிர்ஷ்டம் அவள் பெண்ணாயிருந்துவிட்டாரே, என்ன செய்வது? மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு ‘அழாதே, அம்மா, அழாதே மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலே இருக்க போகிறான்? என்று அந்தக் காலத்தில் வாய்க்கு வந்ததைச் சொல்லி வைத்தேன்.

‘ஐயோ, மஞ்சள் குங்குமத்தோடு போய்ச் சேரலாமென்று இருந்தேனே என்னுடைய தலையெழுத்து இப்படி ஆகிவிட்டதே? இந்தப் பாவிக்கு தலைவலி காய்ச்சல் என்றால் அவர் என்ன பாடு படுத்துவார்? அங்கேயும் இங்கேயுமாகக் குட்டி போட்ட பூனைபோல ஓடி ஓடிவருவாரே! இனிமேல் அப்படி யார் எனக்காக அலையப் போகிறார்கள்?’ என்றாள் அவள் விம்மலுக்கும் விக்கலுக்கும் இடையே.

அதைப்பார்க்கச் சகிக்காமல் நான் முகத்தைத் திருப்பினேன். ‘என்ன இருந்தாலும் அந்தப் பாழும் தெய்வம் என்னை இப்படி அனாதையாக்கி விட்டிருக்க வேண்டாம் என்னவோ, இத்தனை நாளும் என் கையைப் பிடித்தவர் என்னைப் பாடாய்ப் படுத்தி வைக்கும்போதெல்லாம் 'அண்ணா இருக்கிறார்' என்று கொஞ்சம் தைரியமாயிருந்தேன். இப்போது அதுவும் போய்விட்டது’ என்றாள் விநாயகத்தின் அத்தை.

என்னால் முடிந்தவரை அந்த அம்மாவையும் ஒருவாறு தேற்றிவிட்டு வீடு திரும்பினேன்.

வழியில் என் சிந்தனை சுழன்றது. சதாசிவமோ ‘கேட்டபோதெல்லாம் இனி யார் எனக்குக் கடன் கொடுக்கப் போகிறார்கள்’ என்று வருந்துகிறார்.

விநாயகமோ, ‘வக்கீல் வேலைக்குப் படிக்க முடியாமற் போய்விட்டதே’ என்று வருந்துகிறான்.

அம்மாவோ, “என்னை எடுத்துப் போடாமல் எனக்கு முன்னால் போய் விட்டானே” என்று வருந்துகிறாள்.

மனைவியோ, ‘என்னுடைய உடம்புக்கு ஏதாவது வந்தால் இனிமேல் கவனிப்பதற்கு யாரும் இல்லையே’ என்று வருந்துகிறாள்.

வி.க. -16