பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ வழியில்லை!

259

அவள் எழுதியிருந்த அந்த வார்த்தையைப் படித்த பிறகு எனக்கே என்னுடைய தீர்மானத்தில் சந்தேகம் வந்துவிட்டது. எனக்கு மட்டும் என்ன? என்னுடைய கதையைக் கேட்டால் உங்களுக்கும் அந்தச் சந்தேகம் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லைதான்!

★ ★ ★

ந்தச் சங்கத்தின் பெயர் இன்னதென்று எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை. ஆனால் பல பெண்கள் ஒன்று சேர்ந்து கூத்தடிக்கும் சங்கம் அது என்பது மட்டும் என்னுடைய நினைவில் இன்றும் தங்கியிருக்கிறது. அந்தச் சங்கத்துக்கு அவள் காரியதரிசி. அதற்கு ஒரு சமயம் வருஷாந்திரவிழா நடந்தபோது, அதில் என்னைப் பேசுவதற்கு அவள் அழைத்திருந்தாள்.

பெண்களுக்கு மத்தியில் போய்ப் பேசுவதற்கு எனக்கு முதலில் கொஞ்சம் வெட்கமாயிருந்தது. ஆகவே, "எனக்குப் பதிலாக யாராவது ஒரு பெரிய வரை அழைத்துப் பேசச் சொல்லுங்கள்" என்று எழுதினேன். அதற்கு அவள் கன்னத்தில் அடித்தாற்போல் "நாங்கள் பாட்டிமார்களல்ல; நீங்களே வாருங்கள்" என்று எழுதினாள்.

அதற்குமேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அடக்க ஒடுக்கத்துடனும் பயபக்தியுடனும் சென்று அந்த மாதர்மகாசபையில் பேசினேன். விழாவில் கலந்து கொண்ட பிறகு அதுவரை என்னைப் பீடித்திருந்த வெட்கமும் போன இடம் தெரியாமல் போயே போய்விட்டது. எல்லாம் இடத்தின் விசேஷம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

காரியதரிசி வந்தனோபசாரம் கூறியதும் என்னை வழியனுப்ப வந்தாள். வாசலைக் கடந்ததும், "தங்களுடைய பிரசங்கம் ரொம்ப ஜோர் ரொம்ப ரொம்ப ஜோர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது!" என்றாள்.

இதைச் சொல்லிவிட்டு அவள் ஒரு காரணமுமின்றிச் சிரித்தது, என்னை என்னவோ செய்தது. அதன் காரணமாகத்தானோ என்னவோ, "நல்லவேளை என்னுடைய பிரசங்கத்தை மட்டுந்தானே உங்களுக்குப் பிடித்தது?" என்று நான் கொஞ்சம் கிருதக்காகக் கேட்டுவிட்டேன்.

அவள் சளைக்கவில்லை. "உங்களையுந்தான்!" என்று சொல்லிவிட்டு எடுத்தாள் ஒட்டம்.