பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

விந்தன் கதைகள்

போட வேண்டும்!" என்று அகங்கனிந்து சொல்லி அவளை அன்புடன் தழுவச் சென்றார், அவள் விலகிக் கொண்டாள்

* * *

மறுநாள் பொன்னையா வந்தான். அவன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக “ஏண்டா, பொன்னையா எத்தனை நாளைக்குத் தான் நீ என் வீட்டுத் திண்ணையில் பொங்கித் தின்று கொண்டிருக்க முடியும்? இந்தா இந்த ஐம்பது ரூபாயைக் கொண்டு போய் உனக்கென்று ஒரு வீட்டைக்கட்டிக் கொள்” என்று அவனிடம் ஐம்பது ரூபாய் எடுத்துக் கொடுத்தார் தர்மலிங்கம்.

நல்ல வேளையாகப் பொன்னையா மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விடவில்லை. இரு கைகளையும் ஏந்தி அந்தப் பணத்தைப் பக்தி சிரத்தையுடன் பெற்றுக் கொண்டான். “நீங்கநல்லாயிருக்கனும் சாமி!" என்று நெடு மரம் போல் அவர் காலில் விழுந்து கரைபுரண்டு வந்த கண்ணிரால் அவருடைய பாதங்களை நனைத்தான்.

“ஆமாம், இவனுக்குப் பணம் கொடுக்காவிட்டால் நான் கெட்டுப் போய்விடுவேனாக்கும்" என்று தம்முள் முணுமுணுத்துக் கொண்டார் தர்மலிங்கம்.

* * *

ஆனந்தக்கடலில் நீந்திக்கொண்டு வந்த பொன்னையா, அடுத்த நிமிஷத்தில் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். ஆவலே உருவாய்த் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சின்னியிடம் ஐம்பது ரூபாயைக் கொடுத்தான்.

"ஐயோ சாமி, இத்தனை பணம் உனக்கு எது?" என்று திடுக்கிட்டுக் கேட்டாள் சின்னி.

"ஐயாதான் கொடுத்தாரு!" என்றான் பொன்னையா. "மவராஜா இந்த ஏழைகளுக்கு இவ்வளவு பணம் கொடுத்தாரே! அவரு மனுசர் இல்லை; தெய்வம்!"

"தெய்வந்தான் இல்லேன்னா என்னை உன் வாயிலேயிருந்து காப்பாத்தியிருக்க முடியுமா?" என்றான் பொன்னையா சிரித்துக் கொண்டே அந்தப் பணம் மனமுவந்து கொடுத்த பணமல்ல; மனைவி சொன்ன யோசனையின் பேரில் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கொடுத்த பணம்; தன்னை எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவனாக வாழச் செய்யும் பணம் அது என்பது ஏழை பொன்னையாவுக்கு எப்படித் தெரியும்?