பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

விந்தன் கதைகள்

கொண்டு எவ்வளவு நேரந்தான் நின்று கொண்டிருக்க முடியும்? - கொஞ்சம் துணிந்து அங்கிருந்த பெட்டி ஒன்றைச் சிறிது நகர்த்த முயன்றான்.

அவ்வளவுதான்; அந்தப் பெட்டிக்கு அடுத்தாற் போலிருந்த பெஞ்சியில் காலை நீட்டிக் கொண்டு படுத்திருந்த அதன் சொந்தக்காரர் சீறி எழுந்து, “சீ எடு கையை என்னிடம் சொன்னால் நான் நகர்த்த மாட்டேனா நீ எதற்கு என் பெட்டியைத் தொடணும்? எவ்வளவு பளு இருக்கிறது என்று பார்த்துக் கொள்கிறாயா கண்ணை மூடினால் அடித்துக் கொண்டு போய் விடலாமென்று எட்டிப் போடா, நாயே!" என்று இரைந்தார்.

உண்மையிலேயே நாச்சியப்பன் நாயாயிருந்திருந்தால் அவரைக் கட்டாயம் கடித்திருப்பான். அவன்தான் தன்மானமில்லாத மனிதனாயிருக்கிறானே, அதனால் கடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, "நானும் எவ்வளவு நேரமா நின்னுக்கிட்டு வர்றதுங்க? குழந்தை வேறே கையிலே இருக்குது. இல்லாட்டிப்போனா, தொட்டாத் தோசமில்லைன்னு தொட்டேன்; அதுக்கு இப்படிக் கோவிச்சுக்கிறீங்களே!" என்றான்.

"கோபித்துக் கொண்டேனா உன்னுடைய கையையே ஒடித்துப் போட்டிருப்பேன்; போனாற் போகிறதென்று சும்மா விட்டேன்" என்று உறுமினார் பெட்டிக்காரர்.

பொறுமை இழந்த நாச்சியப்பன், "அப்படிப்பட்டவரு இப்படிக் கும்பலிலே கோவிந்தா போட்டுக்கிட்டு வரக் கூடாதுங்க” என்றான்.

உடனே, “அதிகப் பிரசங்கி பல்லை உடைத்துவிடுவேன், பல்லை!" என்று முஷ்டியை மடக்கிக் கொண்டு எழுந்தார் பெட்டிக்காரர்.

அதற்குள் அங்கிருந்த சில பெரிய மனிதர்கள் “கிடக்கிறான் கழுதை விட்டுத் தள்ளுங்கள் ஸார்" என்று பெருந்தன்மையுடன் சொல்லி அந்தப் பெட்டிக்காரரை உட்கார வைத்தனர்.

"பல்லை உடைக்க வேண்டுமானா அவனைத் தொட வேண்டுமே என்று பார்க்கிறேன். இல்லை யென்றால் கட்டாயம் அவனுடைய முப்பது பற்களையும் உடைத்து கையில் கொடுத்திருப்பேன்!" என்று உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டே உட்கார்ந்தார் 'உயர்ந்த ஜாதிக்கார'ரான பெட்டிக்காரர்.