பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

விந்தன் கதைகள்

“அப்படியே செய்யுங்க!" என்றான் அவன்.

நான் உள்ளே சென்று என் சகதர்மினியிடம் நடுங்கும் குரலில் விஷயத்தைச் சொன்னேன். அத்துடன், "இம்மாதிரி ஏழைகளுக்கு இரங்குவது ஏகாதசி விரதம் இருப்பதைக் காட்டிலும் சிறந்தது" என்றும் சொல்லி வைத்தேன்.

அவ்வளவுதான்; ஆண் சிங்கங்களெல்லாம் வெட்கித் தலை குனியும்படியாக அந்தப் பெண்சிங்கம் என்னை ஏறிட்டுப் பார்த்தாள். நான் தலை குனிந்து வெளியே வந்தேன். என் முகபாவத்திலிருந்தே செங்கண்ணன் விஷயத்தைத் தெரிந்து கொண்டு விட்டான். "என்னாலே உங்களுக்கு ஏனுங்க வருத்தம்? நாளையிலேருந்து நான் அவளை வேறே எங்கேயாச்சும் வேலை பார்த்துக்கிடச் சொல்றேன்” என்று கூறிவிட்டு அவன் போயே போய் விட்டான்.

* * *

றுநாள் முதற்கொண்டு கண்ணாத்தா பழைய இடத்துக்கே போய் நிற்க ஆரம்பித்தாள்; வேலை கிடைத்த போது செய்தாள்; கிடைக்காதபோது வீடு திரும்பினாள். செங்கண்ணன் மட்டும் காண்ட்ராக்டர் கச்சாபகேசனிடமே வேலை பார்த்து வந்தான். ஆனால், தினசரி நாலணா மிச்சப்படுத்த வேண்டுமென்ற அவன் மனோரதம் மட்டும் கடைசிவரை நிறைவேறவேயில்லை.

ஆறு மாதங்களுக்கு மேலேயே 'அந்தி பவனம்’ என்று அந்த அழகான பங்களாவின் வேலை நடந்தது. ‘பிளான்' வரைந்து கொடுத்தவர் 'பீஸை'ப் பெற்றுக் கொண்டு போய்விட்டான்; செங்கண்ணனைப் போன்றவர்கள் சேற்றிலும் சகதியிலும் உழன்றனர்; கண்ணாத்தாவை போன்றவர்கள் கல்லையும் காரையையும் சுமந்தனர். கொத்தனார்களோ பதை பதைக்கும் வெய்யிலில் கரண்டியும் கையுமாகக் கற்களைக் கணக்காக அடுக்கினர். தச்சர்களோ உளியும் கொட்டப்புளியுமாக உட்கார்ந்து, வியர்வை சொட்டச் சொட்ட மரத்தைப் 'போடு, போடு’ என்று போட்டனர். இவர்களையெல்லாம் மேஸ்திரி என்னும் ஒரு கூலி, தானும் அவர்களைப் போல் ஒரு கூலி என்பதையே அடியோடு மறந்து, அடிக்கடி மிரட்டிக் கொண்டிருந்தான்.

அவ்வளவு எஜமான விசுவாசமுள்ளவன்போல் நடித்து அவன், ஆளுக்கு ஓரணா இரண்டனா 'தண்டக்காசு' அழும்போது மட்டும் அக்கம் பக்கம் பார்த்து வாங்கிப் பையில் போட்டுக் கொண்டான்!