பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாறுதல் இல்லை

317


அவன் ‘பார்வை' போதாதென்று எண்ணியோ என்னமோ, அடிக்கடி வந்து தன் விலையுயர்ந்த பார்வையை அந்தி பவனத்தின் மீது செலுத்தி வந்தார் கச்சாபகேசன். கட்டிட வேலை முடிந்தது; கடைசியில் கணக்குப் போட்டுப்பார்த்தார்; எல்லாம் போக ரூபாய் ஏழாயிரத்துச் சொச்சம் மிச்சமென்று தெரிந்தது.

அடுத்த சில நாட்களுக்கெல்லாம் அவர் தம்மிடமிருந்த பழைய 'போர்டு மாடல்' கார் ஒன்றை விற்றுத் தொலைத்தார். அத்துடன் ‘அந்தி பவன'த்தின் வாயிலாகக் கிடைத்த ரூபாய் ஏழாயிரத்துச் சொச்சத்தையும் சேர்த்து ஒரு பேஷான 'ப்யூக்' கார்வாங்கி மகிழ்ந்தார்.

இது அந்தி பவனத்தின் மூலம் கச்சாபகேசனின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சிறு மாறுதல்.

ஆனால் அந்த ‘அந்தி பவன'த்தின் சிருஷ்டி கர்த்தாக்களான செங்கண்ணன், கண்ணாத்தா முதலியவர்களின் வாழ்க்கையிலோ....?

எந்தவிதமான மாறுதலும் இல்லை!