பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.வாழப் பிறந்தவன்

29

ஆகியிருக்கலாம். அப்படித் தானே இந்தப் பாழாய்ப் போன உலகம் இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது?

* * *

எல்லோரையும்விட அந்த ஊரில் முத்தண்ண முதலியார்தான் பெரிய பணக்காரர். அது மட்டுமல்ல. பெரிய பண்ணைக்காரரும் கூட. ஏராளமான நிலபுலன்கள், தோட்டம் துரவுகள் எல்லாம் அவருக்குச் சொந்தமாகயிருந்தன. அவருடைய தென்னந்தோப்பு ஒன்றில்தான் இருளப்பன் வேலை செய்து வந்தான்.

வேனிற் காலத்தில் தோப்புக்கு நீர் பாய்ச்ச நேரும். அந்தக் காலத்தில் ஏற்றம் இறைப்பதற்காகத் தினசரி மூன்று ஆட்களைக் கூலிக்குப் பிடித்துக் கொண்டு வருவான் இருளப்பன். அங்கே கூலிக்கு ஆள் பிடிப்பது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல. எட்டணாக் காசை வீசி யெறிந்தால் எத்தனையோ ஏழைகள். பட்டாணிக் கடலையைக் கண்ட குரங்குக் கூட்டம் போல் பாய்ந்து வருவார்கள். பாதரட்சை மாதிரி அவர்களை அவசியம் இருக்கும்போது உபயோகித்துக் கொண்டு அவசியமில்லாத போது தள்ளிவிடலாம். அவர்கள் ஏன் எப்பொழுதும் அந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஆசையை அடக்கும் விஷயத்தில் அவர்கள் வேதாந்திகளைக்கூடத் தோற்கடித்து விடுவார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக எட்டடி இடம் வாழ்வதற்கு - எண்சாண் உடம்புக்கு எட்டடி இடமே போதுமென்பது அவர்கள் சித்தாந்தமோ, என்னமோ அப்புறம் ஒரு பெண்டாட்டி வருஷத்துக்கு ஒரு பிள்ளை வீதம் அவள் பெற்றுப் போட வேண்டியது. உயிர் பிழைப்பது அந்தக் குழந்தைகளின் ஆயுள் காலத்தைப் பொறுத்தது. அவற்றைப் பற்றிப் பெற்றோருக்குக் கவலையில்லை. அவர்களுடைய கவலை யெல்லாம் அன்றைய உணவுக்கு வழி என்னவென்பதே. அதற்கேதான் பொழுது சரியாயிருக்கிறதே!

இத்தனை துன்பத்தோடுதான் வாழ்கிறார்களே, இவர்களுக்குச் செத்துப் போகவாவது ஆசை இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. வேறு எந்த ஆசைக்கும் அவர்களை ஆளாக்காத ஆண்டவன் இந்த ஒர் ஆசைக்காவது அவர்களை ஆளாக்கியிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? அவர்களுடைய உழைப்பைக் கொண்டு தனி மனிதன் ஏகபோகத்துடன் வாழ முடியாமற் போகலாமல்லவா?