பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

விந்தன் கதைகள்

மாரிக்காலம் வந்தால் இவர்கள் படும் பாடு திண்டாட்டம். ஆனால் இருளப்பனின் பாடு கொண்டாட்டம். ஏனெனில் அந்தக் காலத்தில் தன்னுடைய தள்ளாத வயதில் மண் வெட்டியை எடுத்துக் கொண்டு மரத்துக்கு மரம் குனிந்து தண்ணிர் மாற்றும் வேலை அவனுக்கு இருக்காது. தோட்டத்தைக் காவல் காப்பது, வேலியை ஆடு மாடு மேயாமல் பார்த்துக் கொள்வது, உதிர்ந்த ஒலைகளை முடைந்து போடுவது இவற்றோடு அவனுடைய தினசரி வேலைகள் முடிந்து விடும். எல்லாவற்றுக்கும் சம்பளம் மாதம் பதினைந்து ரூபாய்தான். எப்பொழுதுதாவது வேலைகளில் மட்டும் மாறுதல் ஏற்பட்டாலும் ஏற்படுமே தவிர, சம்பளத்தில் மட்டும் மாறுதல் என்ற பேச்சுக்கே இடம் இருப்பதில்லை!

இந்த நிலைமையில் கேதாரியின் கல்யாண விஷயமாக இருளப்பன் கடவுளைத்தான் நம்பியிருந்தான். இன்று நேற்று அல்ல; எத்தனையோ நாட்களாக. அந்த நம்பிக்கை இப்போது தளர்ந்து விட்டது. காரணம் ஊராரின் பேச்சுத்தான்.

கடைசியில் கடவுளை நம்பின மாதிரி எஜமானையும் கொஞ்சம் நம்பித்தான் பார்ப்போமே என்று அவனுக்குத் தோன்றிற்று.

ஒருநாள் தோப்பைப் பார்வையிட வந்த எஜமானை நெருங்கினான்.

"சாமி ஒரு சேதிங்க"

"என்னடா சேதி?”

"நம்ம கேதாரி யில்லே...?”

“ஆமாம், இருக்கா"

‘அவளுக்கு வயசாயிடுச்சு...."

“ஆமாம்; ஆயிடுச்சு"

‘கண்ணாலம் பண்ணனுமில்லே..."

“ஆமாம்; பண்ணனும்"

"ஐயாமாரு மனம் வச்சி ஏதாச்சும் கொஞ்சம் பணம் கொடுத்தா...."

"பணம் என்னத்துக்கு?"

"கண்ணாலம் பண்ணத்தான்"

இதைக் கேட்டதும் எஜமான் என்ன எண்ணினாரோ என்னமோ, அவருக்குச் சிரிப்பு வந்து விட்டது.