பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரிக்ஷாவாலா

73

 கார் வந்து அவளை ஆஸ்பத்திரிக்கு ஏற்றிக் கொண்டு போயிற்றாம். அன்றிரவு ஆஸ்பத்திரி சேவ ன்வந்து அவள் இறந்துவிட்ட சேதியைத் தெரிவித்தானாம். அவனிடம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் “நமக்கு ஏன் வீண் வம்பு?” என்று நினைத்தோ என்னமோ அவளுக்கு இங்கே யாரும் இல்லை என்று சொல்லி விட்டார்களாம்.

இதைக் கேட்டதும் என்மனம் எப்படி இருந்திருக்கும்? என்னை யாரோ அந்தரத்தில் தூக்கிச் செல்வது போல இருந்தது; மெய்மறந்து நின்ற இடத்திலேயே நின்றேன். இப்படி எவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்தேனோ எனக்குத் தெரியாது. “அடேய், நாலுநாள் வண்டி வாடகை எங்கே?” என்று யாரோ என்னைக் கேட்பது கேட்டுத் திரும்பினேன். வண்டிக்குச் சொந்தக்காரன் எனக்கு எதிரே நின்று கொண்டிருந்தான். அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு எங்கே போகிறோம்? என்று தெரியாமல் ஓடினேன்.

அதற்குப் பிறகு சுமார் இருபத்தைந்து வருடங்கள் எப்படியோ கழிந்தன. கடைசியில் இந்தக் கைலாசநாதரின் கிருபையால் எனக்கு இங்கே ஒரு வேலை கிடைத்தது. என்னமோ காலத்தைக் கழித்துக் கொண்டு வருகிறேன். என்றாலும் அந்தக் கவலை மட்டும் என்னை விட்டுத் தொலையவில்லை. என்ன செய்வது?” என்று கிழவன் தன் கதையைச் சொல்லி முடித்தான்.

இந்தச் சமயத்தில் ‘கைலாசநாதர்’ கோயிலின் தர்மகர்த்தாவான தர்மதீரநாயக்கர்காரில் வந்து இறங்கிக் கோயிலுக்குள்ளே நுழைந்தார். அவரைப் பார்த்ததும் “அதோ தர்மகர்த்தா வந்து விட்டார்; நான் போகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்தான் கிழவன்.

அதுவரை அவன் சொன்ன கதையைக் கேட்டுக் கொண்டிருந்த காசிலிங்கம் ஒரே வியப்புடன் “தர்ம கர்த்தா வேறு யாருமில்லை, சுவாமி உம்முடைய பிள்ளை தான். இவரை ஈன்ற பிறகுதான் உம்முடைய மனைவி இறந்து போனாள். அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்த ஒரு ‘நர்ஸ்’ஸால் இவர் எடுத்து வளர்க்கப்பட்டார். வேண்டுமானால் அந்தக் கதையை அவரையே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது கேட்ட கதையிலிருந்து நீங்கள்தான் அவருடைய தந்தை என்று எனக்கு இன்று தான் தெரிந்தது” என்றான்.

“ஆ!” என்று அலறினான் கிழவன். ஆச்சரியத்தால் அவனுடைய விழிகள் பிதுங்கின; ஒரு நிமிஷம் அவனுடைய இதயம் ‘படபட’வென்று அடித்துக் கொண்டது. மறுநிமிஷம் அது ‘டக்’கென்று நின்றுவிடவே, கிழவன் ‘பொத்’ தென்று கீழே விழுந்து விட்டான்.

சஞ்சலம் சாவில் முடிந்துவிட்டது!