பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சித்தப்பா

ன்று மாலை நான் வீட்டிற்குள் நுழையும்போது அவளைத் தவிர வேறு யாரும் அந்த வீட்டில் இல்லை. அப்போது தான் அவள் கூடத்திலிருந்து கண்ணாடியின் முன்னால் நின்று முகத்தில் பெளடரைப் பூசிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் அவளைப் பார்க்கும்போது சமையலறைக்குத் திருடச்சென்ற கறுப்புப் பூனை, சாம்பலைப் பட்டதும் படாததுமாகப் பூசிக்கொண்டு எதிரே வருவது போலிருந்தது. அதைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் நான் சிரித்துவிட்டேன். எனது சிரிப்பின் ஒலியைக் கேட்டதும் அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அப்பொழுது அவள் முகத்தில் தோன்றிய நாணத்தின் சாயல் எனக்கு ஒருவிதமான இதத்தைக் கொடுத்தது.

அடுத்த கணமே அவள் முகத்தை இரு கைகளாலும் பொத்திய வண்ணம் தன் அறைக்குள் ஒடி ஒளிந்து கொண்டாள்.

***

வள் வேறு யாருமில்லை; அத்தையின் மகள்தான். பெயர் நீலா; நான் எப்படி தாய் தந்தையற்ற அனாதையோ, அதே மாதிரி அவளும் தாய் தந்தையற்ற அனாதை. இருவரும் எனது சித்தப்பாவின் பாதுகாப்பில் தான் இருந்தோம். அவர் எனது அப்பாவுடன் பிறந்தவர்தான்; ஆனாலும் என்னைக் கண்டால் அவருக்கு ஏனோ பிடிப்பதில்லை. சித்தி மட்டும் எங்களிடம் கூடியவரையில் விசுவாசத்துடனே நடந்து கொண்டாள்.

என்றைக்காவது ஒருநாள் இரவு வெகு நேரங் கழித்து நான் வருவேன். அம்மாதிரி சமயங்களில் எனக்காக என் சித்தி காத்திருக்க முடியாது. அவளை முதலில் சோற்றில் தண்ணீரைக் கொட்டிவிட்டு வந்து படுத்துக் கொள்ளச் சொல்வார் சித்தப்பா. அத்துடன் நின்றாலாவது எவ்வளவோ நன்றாயிருக்குமே; அதுவும் கிடையாது. தெருக்கதவை வேறு சாத்தித் தாளிட்டு விடுவார். நான் வந்தால் படுத்துக் கொள்வதற்கு வேறு எந்த வீட்டுத் திண்ணையாவது தேடிக் கொள்ள வேண்டியது தான். இந்த லட்சணத்தில் நீலா என்னைக் காதலித்தாள் என்றால் அது என்னுடைய கஷ்ட காலந்தானே?

அப்பொழுது நான் மேற்கொண்டிருந்த தொழிலோ பத்திரிக்கையில் வெளியாகும் கதைகளுக்குப் படம் போடுவது. நான் ஒன்றும் அப்படிப் பிரமாதமான ஓவியக்காரனல்ல; இளம் ஓவியக்காரன். ஓரிரண்டு பத்திரிகைகளில் இடம் கிடைப்பதே