பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தப்பா

77

இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு சித்தப்பா நான் வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு சேதியைக் கொண்டு வந்தார். அன்று அவர் வேலையிலிருந்து வரும்போதே என்றுமில்லாத உற்சாகத்துடன் சித்தியைக் கூப்பிட்டு “அடியே! நீலா அதிர்ஷ்டசாலி தான். அவளுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைத்து விட்டது. பிள்ளையாண்டானின் பெயர் சுந்தரராகவனாம். மாதம் இருநூறு ரூபாய் சம்பாதிக்கிறானாம். வரதட்சணை ஒரு தம்படிகூட வாங்கக்கூடாது என்கிறானாம். ஆனால் பெண்ணை நேரில் கண்டு ‘உனக்கு என்னைக் கல்யாணம் செய்து கொள்ள இஷ்டந்தானா?’ என்று ஒரு வார்த்தை கேட்டு விட்டுத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதிப்பானாம். நாளைக்கு அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் நம் வீட்டுக்குப் பெண்ணைப் பார்க்க வருகிறார்கள்” என்றார்.

“நல்ல வரனைத் தேடிக்கொண்டு வந்து விட்டீர்கள் ஏன், வீட்டிலேயே இருக்கும் வரனுக்கு என்ன?” என்று எரிந்து விழுந்தாள் சித்தி.

“அதெல்லாம் எனக்குத் தெரியும்; நீ பேசாமல் வேலையைப் போய்ப் பார்!” என்றார் சித்தப்பா.

மறுநாள் பிள்ளை வீட்டார் வந்தார்கள். மாப்பிள்ளையைக் கண்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் வேறு யாருமில்லை; எனது பள்ளிக்கூடத்து நண்பன், சுந்தர் என்னும் புனைபெயர் பூண்ட சுந்தரராகவன்!

“செளக்கியமா?” என்று சம்பிரதாயப்படி நான் அவனை விசாரித்தேன்!

“செளக்கியந்தான்; இனிமேல் நீயும் செளக்கியமாயிருக்கலாம்” என்று ஒரு போடு போட்டான் அவன்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டேன்.

“அதைப்பற்றி நான் உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்; இன்று வரும்” என்றான் அவன்.

இந்தச் சமயத்தில் சித்தப்பா அவனைக் கூப்பிட்டனுப்பினார் பெண்ணைப் பார்ப்பதற்காக. அவனும் “இதோ வந்துவிடுகிறேன்!” என்று என்னிடம் சொல்லி விட்டுச் சென்றான். அவன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் நானும் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன்.