பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

விந்தன் கதைகள்

என்று கோள் சொல்லிவிட்டான். அதைக் கேட்டதும் கோவிந்தக் கோனானுக்கு ஆத்திரம் அளவுக்கு மீறி வந்து விட்டது. ஏனெனில் அவன் கோபாலக் கோனானிடம் வேண்டிய மட்டும் கடன் வாங்கியிருந்தான். அந்தக் கடனை ஈடு செய்வதற்காக அவன் தன்னுடைய பெண்ணைக் கோபாலக் கோனானின் பிள்ளைக்குக் கல்யாணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தான்.

ஆகவே “இனிமேல் நீ என் வீட்டுப் பக்கம் தலையைக் காட்டினா, தலையை வெட்டிப்பிடுவேன்” என்று சொல்லி அவன் நந்தபாலனை விரட்டி விட்டான்.

எதிர்பாராத இந்தச் சம்பவத்தைக் கண்டு தாரை தாரையாகக் கண்ணீர் வடிப்பதைத் தவிர, தங்கத்தால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.

தனக்கு ஆறுதல் அளிக்க ‘தலைவிதி’யைத் தவிர வேறு ஒன்றையும் காணாத நந்தபாலன், அந்த ஊருக்கு அப்பொழுது வந்திருந்த கழைக் கூத்தாடிகளின் கோஷ்டியில் சேர்ந்துவிட்டான். ஏன், தங்கத்தை மறக்க அது தான் சிறந்த வழி என்றும் அவன் அப்பொழுது நினைத்தான்.


ந்தக் கடைசிக் கட்டத்துக்கு வந்ததும் நந்தபாலன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டுத் தன்னுடைய மனோரதத்தை மிக்க பிரயாசையுடன் நிறுத்தினான். அப்பொழுது அந்த ஆஸ்பத்திரியின் தோட்டத்துக்கு வெளியே,

“தங்கத்தாலே காப்புப் போட்டுத்
தங்கமே தங்கம்....!”

என்று யாரோ பாடிக்கொண்டு சென்றது அவன் காதில் விழுந்தது. குரலோசையிலிருந்து இந்தப் பாட்டைப் பாடுவது தங்கமாய்த்தான் இருக்க வேண்டுமென்று ஊகித்துக் கொண்ட நந்தபாலன், வியப்பும் திகைப்பும் ஒருங்கே அடைந்தவனாய் ஆஸ்பத்திரியின் மதிற்கவருக்கு மேல் தலையை நீட்டி எட்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம் - சந்தேகமேயில்லை. தங்கம், தங்கமேதான்

“தங்கம்! தங்கம்!”

நந்தபாலனைப் பார்த்ததும் தங்கமும் தன்னுடைய ஆடல் பாடலை நிறுத்து விட்டு அசைவற்று நின்றாள்.