பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருப்தி

ண்பர் நட்-'நட்'டாவது, 'போல் 'டாவது என்று நினைக்காதீர்கள் 'நடேசன்' என்ற பெயரைத் தான் 'நட்' என்று 'ரத்தினச் சுருக்க'மாகச் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் நண்பர்.

காரணம், தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழில் கவிதை எழுதுவதை அகௌரவமாக எண்ணி, அவர் ஆங்கிலத்தில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டது தான்!

இதனால் ஆங்கில நண்பர்கள் மட்டுமல்ல; ஆங்கில நாணயங்களான பவுன், ஷில்லிங் பென்ஸும் அவருக்குத் தாராளமாகக் கிடைத்து வந்தது.

எனினும், அந்த நோபல் பரிசை-உலகம் முழுவதும் ஒரே நாளில் தன்னை அறிமுகப்படுத்தி வைத்து விடும் சக்தி வாய்ந்த அந்த நோபல் பரிசை-ஒரு முறையேனும் தட்டிக்கொண்டு விடவேண்டும் என்ற கட்டுங்கடங்காத ஆசை அவருக்கு. இதனால் அந்தப் பரிசுக்குரிய காலம் வரும்போதெல்லாம் அதை ஆவலுடன் எதிர்பார்ப்பதும், எதிர்பார்த்து ஏமாற்ற மடைவதும் அவருக்கு வழக்கமாயிருந்துவந்தது.

ரு நாள், 'வீடு வேண்டும்; பெரிய வீடாக வேண்டும்!' என்று தம் கைகள் இரண்டையும் அகல விரித்துக்காட்டிக்கொண்டே வந்தார், நண்பர் நட்.

"நீங்கள் நான்கு பேர்தானே இருக்கிறீர்கள்? இப்போதிருக்கும் வீடு போதவில்லையா, உங்களுக்கு?" என்றேன் நான்.

"எங்களுக்காகக் கேட்கவில்லை, நான். லண்டன் நண்பர் பட் என்பார் வரப்போகும் வசந்த காலத்தின்போது இந்தியாவுக்கு வருகை தரப் போவதாக எழுதியிருக்கிறார். கிடைத்தற்கரிய அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நான் அவருக்கு ஒரு நாள் விருந்து வைக்கலாமென்று நினைக்கிறேன். இப்போதிருக்கும் வீடு அதற்குத் தகுதியாயிருக்கும் என்று தோன்றவில்லை. எனவே தான்......."