பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"தாயிற் சிறந்ததொரு...."

331

இருவரும் நேரே பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தனர். கலாசாலை 'மைனர்'களும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர். இரண்டு மூன்று முறை அவர்களைத் திரும்பிப் பார்த்த ஜானகிராமன் அப்புறம் திரும்பிப் பார்க்கவேயில்லை.

ஜானகிராமன் பஸ் ஸ்டாண்டை அடைவதற்கும் பஸ் வந்து நிற்பதற்கும் சரியாயிருந்தது. தம்பதிகள் இருவரும் பஸ்ஸில் ஏறினார்கள். தங்களைத் தொடர்ந்து வந்த 'மைனர்'களை மட்டந்தட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் "கர்ம சிரத்தையுடன் இவ்வளவு தூரம் வந்து எங்களைப் பஸ்ஸில் ஏற்றி விடுகிறீர்களே, ரொம்ப சந்தோஷம்!" என்று சொல்லிவிட்டு ஜானகிராமன் திரும்பினான்.

"நீங்களா, அத்திம்பேரா! இருட்டில் உங்களை நான் கவனிக்கவே யில்லை; யாரோ என்று பார்த்தேன் மன்னிக்கணும்" என்று அசடு வழியச் சொன்னான் அந்த 'மைனர்'களில் ஒருவன்.

அவ்வளவுதான்; அடுத்தவன் கையிலிருந்த சிகரெட் துண்டை வீசி எறிந்து விட்டுக் கம்பி நீட்டிவிட்டான்.

"வைஜயந்தி! இப்படித் திரும்பி உன் தம்பியின் அழகைக் கொஞ்சம் பாரேன்?" என்றான் ஜானகிராமன்.

அவள் எதிர்பாராத விதமாகத் தம்பியைக் கண்டதும் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

ஜானகிராமன் அவன் கையைப் பிடித்து இழுத்துப் பலவந்தமாக உட்கார வைத்தான்.

அசடுவழியும் தம்பியின் முகம் அக்காவின் அநுதாபத்தைப் பெற்றது. அவள் பேச்சை மாற்ற எண்ணி, "நீ எங்கே வந்தாய்? எப்போது வந்தாய்?" என்று கேட்டாள்.

"அப்பாவின் நண்பர் ஒருவரின் வீடு இங்கே இருக்கிறது, அக்கா! அவருடைய மகனுக்கு இன்று காலை கல்யாணம். அப்பா அதற்கு என்னை அனுப்பி வைத்திருந்தார். அப்படியே உன்னையும் பார்த்து விட்டு வரச் சொன்னார். என்னுடன் இருந்தானே, அவன் என் நண்பன். அவனைக் கல்யாண வீட்டில் பார்த்தேன். அவனும் நானும் சாயந்திரம் உங்கள் வீட்டுக்கு வந்தோம். நீங்கள் நவராத்திரி விழாவுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். சிறிது நேரம் கடற்கரையில் இருந்து விட்டு வரலாம் என்று இங்கே வந்தேன்.