பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

524

விந்தன் கதைகள்

யிருந்தாலும், கோட்பாடு எதுவாயிருந்தாலும் அதை உருவாக்குவது காலம்; உடைத்தெரிவதும் காலந்தான்! அந்தக்காலத்தையொட்டிநாம் கடைத்தேற வழிகோலுவோம்; முடிவைப் பற்றிய கவலையில்லாமல் 'மூட நம்பிக்கைகள் ஒழிக!' என்று ஒரே மூச்சில் முழங்குவோம், முழங்குவோம்; முழங்கிக் கொண்டே இருப்போம்!"

"அங்ஙனம் முழங்குவது சுயமரியாதைக்கு விரோதமில்லையா, தன்மானத்துக்குப் பங்கமில்லையா?”

அவன் குமுறினான்; கொந்தளித்தான்.

"சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!"

அவர் பாடினார்; சொன்னதையே சொல்லிப் பொற்சிலம்பமாடினார்.

"போதும், இந்தப் பல்லவி! வருகிறேன்; வணக்கம்!”

'க்க'த்துக்கு ஓர் 'அழுத்தம்' கொடுத்து விட்டு வெளியே வந்தான் சிகாமணி - இல்லை, முடிமணி!

இனி என்ன?

இந்தக் கேள்வி எழுந்தது அவன் உள்ளத்தில், நின்றான்.

வீட்டைக் கூட்டிய வேலைக்காரி குப்பையைக் கொண்டு வந்து வெளியே கொட்டினாள்.

அதிலிருந்த ஒரு கரித் துண்டு அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. எடுத்தான்; எழுதினான் - அந்தக் கணமே அவன் கண்ட முடிவைத்தான்!

மறுநாள்...

சிகாமணி கண்ட முடிவைச் சிதம்பரம் கண்டார்; சிவகாமியும் கண்டாள் - ஏன், ஊர் கண்டது; ஊராரும் கண்டார்கள்.

அது என்ன முடிவு என்கிறீர்களா? - அது தான் திருந்திய திருமணத்தின் திடீர் முடிவு; ஒருவருக்கும் தெரியாமல் முல்லையை இழுத்துக் கொண்டு ஓடிவிட்ட முடிவு!

இந்த முடிவு தெரிந்ததும் "உங்கள் முடிமணிதான் எங்கள் முல்லையை இழுத்துக் கொண்டு ஓடி விட்டான்!" என்றாள் பெண்ணைப் பெற்றவள்.

"உங்கள் முல்லைதான் எங்கள் முடிமணியை இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள்!"என்றாள் பிள்ளையைப் பெற்றவள்.