பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிழைக்கத் தெரியாதவன்

ள்ளிரவு; தங்களையும் கொன்று தின்னத் துணிந்து விட்ட சீனர்களுக்கு அஞ்சியோ என்னமோ, நாய்கள் கூடக் குரைப்பதை நிறுத்தி விட்டிருந்தன.

அந்த நிசப்தமான வேளையிலே, திடீரென்று ஓர் அலறல்;

"ஐயோ, போச்சே! ஒரு மாதச் சம்பளம் பூராவும் போச்சே!"

கேட்போரின் நெஞ்சைப் பிளக்கும் ஏழைத் தொழிலாளி ஒருவனின் இந்த அலறல் மாடி அறையில் உட்கார்ந்து, அடுத்தாற்போல் மந்திரி பதவியை அடைவதற்கான வழி வகைகளைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த தியாகி தீனதயாளரின் காதில் விழுந்தது - ஆம், அவர் இப்பொழுது எம்.எல்.ஏ அதாவது, மதிப்பிற்குரிய மக்கள் பிரதிநிதி!

"கத்தாதே! இதோ பார், கத்தி - குத்தி விடுவேன்"

வழிப்பறிக்காரனின் மிரட்டல் இது!

இந்த மிரட்டலைத் தொடர்ந்து என்ன கனவு கண்டாளோ என்னமோ, "ஐயோ! என்னைக் குத்துகிறானே!" என்று அலறி எழுந்தாள் அவருக்குப் பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருடைய மனைவி திலகம்.

"உன்னை யாரும் குத்தவில்லை; தெருவில் யாரையோ யாரோ குத்துகிறார்கள் - நீ தூங்கு!" என்று சொல்லிக் கொண்டே சென்று, மின்சார விசிறியின் 'ஸ்விட்'சைப் போட்டார் தீனதயாளர்.

"ரொம்ப அழகாய்த்தானிருக்கிறது! யாரையோ யாரோ குத்துகிறார்களாம். நாளைக்கு அவர்கள் நம்மையும் குத்த வந்து விட்டால்?"

"பைத்தியக்காரி! நாம் என்ன, நடந்தா வரப்போகிறோம்? நமக்குக் கார் இருக்கிறது; டிரைவர் இருக்கிறான்; போலீஸ் இருக்கிறது; போலீஸைக் கூப்பிடப் போன் இருக்கிறது....."

"அதையாவது செய்யுங்களேன், உங்களுக்குப் பக்கத்தில் தானே 'போன்' இருக்கிறது?"

"அதுதான் கூடாது! இந்தத் தெருவில் 'போன்' உள்ள வீடு நம் வீடு ஒன்று தான், இது அந்த வழிப்பறிக்காரர்களுக்கும் ஒரு வேளை