பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

562

விந்தன் கதைகள்

கவியின் அஞ்சாநெஞ்சம் அரசனின் அதிகாரத் திமிரைக்கூட ஒர் அசக்கு அசக்கிவிட்டது. "வேறு வழி?" என்று கேட்டுக் கொண்டே அவன் இஸாவை ஏற இறங்கப் பார்த்தான்.

"வேண்டுமானால் அதை 'அரே அல்லா, வா!' என்று ராணியைக் கூப்பிடச் சொல்லுங்கள்; வந்தால் நான் அதைத் தடுக்க மாட்டேன்!” என்றான் இஸா.

பாதுஷா, ராணியின் முகத்தைப் பார்த்தான்; அவளும் குறிப்பறிந்து 'அரே அல்லா வா!' என்று அந்த மானை அன்புடன் அழைத்தாள்.

அதுவரை தன் இரு நீண்ட காதுகளையும் உயர்த்தி வளைத்து அவள் சொல்வதைத் தன் அகன்ற விழிகளால் கவனித்துக் கொண்டிருந்த 'அல்லா' உடனே கவி இஸாவுக்குப் பின்னால் சென்று மறைந்து கொண்டது. முகத்தில் புன்னகை தவழ, அந்த மானை அன்புடன் துக்கி மார்புடன் அணைத்துக் கொண்டான் கவி.

அன்பால் பிணைக்கப்பட்டிருந்த அந்த இரு ஜீவன்களுக்கு முன்னால் அரசனின் ஆணவமும் கொஞ்சம் ஒடுங்கிற்று. "ஆயிரம் மோகராக்கள் தருகிறேன்! மானைக் கொடுத்துவிடு!" என்றான்.

"அந்த மோகராக்களும் உமக்குச் சொந்தமில்லை; இந்த மானும் எனக்குச் சொந்தமில்லை; உலகத்தில் இருக்கும் எல்லாப் பொருளுமே உண்மையில் அல்லாவினுடையவையல்லவா? அவற்றில் எதையாவது விற்கவோ வாங்கவோ நமக்கு என்ன உரிமையிருக்கிறது?" என்று கேட்டான் கவிஇஸா.

பாதுஷா பொறுமையிழந்தான். "என்ன உளறுகிறாய்? நான் யார் என்று தெரியவில்லையா?" என்று அனலைக் கக்கினான்.

"தெரியாமலென்ன...!"

"தெரிந்தால் உடனே மானைக் கொடுத்து விடு; மன்னித்து விடுகிறேன்!"

"என்னை மன்னிக்கக் கூடியவர் ஒரே ஒருவர் தான் உண்டு; அவர்தான் அல்லா!" என்றான் கவி. அரண்மனையின் முகட்டை நோக்கி.

"ஹா!" என்றான் பாதுஷா. அவன் கை உடைவாளை உருவ விரைந்தது. அதற்குள் என்ன நினைத்தானோ என்னமோ, "இவனைக் கொண்டு போய்ச் சிறையில் தள்ளுங்கள்!" என்றான்.