பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

634

விந்தன் கதைகள்

அதற்குமேல் கேட்க நா எழவில்லை ஹேமாவுக்கு; விழித்தது விழித்தபடி நின்றாள்.

"ஆமாம், மறுபடியும் நான் அமங்கலியாகிவிட்டேன்!" என்றாள் அவள், கண்களில் நீர் மல்க.

"மகன் செல்வம்?"

"அதை ஏன் கேட்கிறாய்? என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சோக நிகழ்ச்சி அது!"

"எது?"

"அந்தச் சின்னஞ் சிறுசு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டது!"

"காரணம்!"

"நான்தான்!"

"நீயா?"

"ஆமாம்; அவனுடன் படித்த சிறுவர்களில் சிலர் அவனைப் பார்க்கும்போதெல்லாம், 'இவன் யார் தெரியுமா? இவனுக்கு அம்மா ஒன்றாம்; அப்பா இரண்டாம்!" என்று சொல்லிச் சொல்லிக் கை கொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்களாம். அந்த அவமானம் தாங்காமல் ஒரு நாள் குழந்தை பள்ளிக்கூடத்துத் தோட்டத்திலிருந்த பாழுங்கிணற்றில் விழுந்து........"

அவள் முடிக்கவில்லை; அதற்குள் அங்கே வந்து நின்ற இன்னொரு டாக்ஸியிலிருந்து கீழே இறங்கிய வாசு, "எல்லாம் தயார், ஹேமா! நீ ஏற வேண்டியதுதான் பாக்கி!" என்றான் பரபரப்புடன்.

அவனையும் அவன் கொண்டு வந்திருந்த டாக்ஸியையும் ஒரு கணம் மாறி மாறிப் பார்த்த ஹேமா, மறுகணம் என்ன நினைத்தாளோ என்னமோ, அவன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகக் கதவைப் படாரென்று அடித்துச் சாத்தித் தாளிட்டுவிட்டு உள்ளே வந்தாள். பரண்மேலிருந்த தன் கணவனின் படத்தை எடுத்துப் பழையபடி கூடத்தில் மாட்டிவிட்டுக் 'கோ' வென்று அழுதாள்!

அப்போதும் அந்தப் படம் தன்னைப் பார்த்துச் சிரிப்பது போல்தான் இருந்தது அவளுக்கு!