பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மறுமணம்

389

இப்படிப் பட்ட வாழ்க்கையில் அன்புக்கு இடமுண்டா? அன்புக்கு இடமில்லை என்றால் இந்த வாழ்க்கை என்னத்திற்கு? இந்த உலகம்தான் என்னத்திற்கு?

இப்படியெல்லாம் என்மனம் இப்பொழுது எண்ணமிடுகிறது; எண்ணமிட்டு ஏங்குகிறது.

வீட்டில் உள்ளவையெல்லாம் போட்டது போட்ட இடத்தில் கிடக்கின்றன; ஏற்ற இடத்தில் அவை எடுத்து வைக்கப் படவில்லை; வீடே வெறிச் சென்று கிடக்கிறது. இத்தனைக்கும் அவளைத் தவிர வீட்டில் எல்லாம் இருக்கின்றன; இருந்தும் என்ன? ஒன்றுமே இல்லாதது போலல்லவா இருக்கிறது!

நல்ல வேளையாக குழந்தைகளைப் பராமரிப்பதற்கு மட்டும் தன் சிநேகிதி சீதாவை அவள் வைத்து விட்டுப் போயிருந்தாள்.

எதிர் வீட்டில் குடியிருப்பவள் அவள்; வாழ்க்கை இன்னதென்று தெரியுமுன்பே விதவையாகி விட்டாள். அவளுக்குத் தகப்பனார் இல்லை. தாயார் இருந்தாள். இவர்கள் இருவருக்கும் ஜீவனோபாயம் அளித்துவந்தது ஒரே ஒரு இயந்திரம் - தையல் மெஷின்-உணர்ச்சியற்றது!-ஆம், உணர்ச்சியுள்ள உறவினர்கள் பலர் அவர்களுடைய திக்கற்ற நிலையைப் பார்த்ததும் பார்க்காதது போல் இருந்து விட்டார்கள்! அந்தச் சீதாதான் இப்போது ரகுவுக்கும் ராதைக்கும் தாயார்!

குழந்தைகள் இருவரும் தலைவாரிக் கொள்ளவேண்டுமா அவளிடந்தான் செல்வார்கள். பொட்டிட்டுக் கொள்ள வேண்டுமா?-அவளிடந்தான் செல்வார்கள். சட்டை போட்டுக் கொள்ள வேண்டுமா?-அவளிடந்தான் செல்வார்கள்.

எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் அவள் இத்தனை காரியங்களையும் செய்து வந்தாள்.

ஒருநாள்மாலை வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தேன். உள்ளே சீதாவின் பேச்சுக் குரல் கேட்டது. செவிமடுத்தேன்.

"நிமோனியாவாம்; 'மிக்சர்' கொடுத்தார்!" என்றாள் அவள்.

அவ்வளவுதான்; "யாருக்கு நிமோனியா" என்று உடனே கேட்டுவிட என்மனம் துடித்தது.

அதற்குள் "காலையில் பள்ளிக் கூடத்திற்கு போகும் போது நன்றாகத்தானே போனான்? அதற்குள் இப்படி வந்து விட்டதே?" என்று அங்கலாய்த்தாள் என் தாயார்.