பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

கேற்ற சுவர் கண்ட இடங்களிலெல்லாம் நின்று, அங்கங்கே ஒரு போஸ்டரை ஒட்டிவிட்டு மேலே மேலே சென்று கொண்டிருந்தார்கள்.

பொழுது விடியும் நேரம்; “இன்னும் எவ்வளவு போஸ்டர் பாக்கியிருக்கும்?” என்று முன்னால் சென்றவன் திரும்பி, பின்னால் வந்தவனைக் கேட்டான்.

“நூறு போஸ்டருக்குக் குறையாமல் இருக்கும்” என்றான் அவன். “ அடேயப்பா! இன்னும் அத்தனை போஸ்டரா இருக்கிறது?...ஆவ்!” என்று கொட்டாவி விட்டுக் கொண்டே,“வா, செட்டியார் கடைக்குப் போவோம்” என்றான் அவன்.

இருவரும் செட்டியார் கடைக்குப் போய்க் கதவைக் தட்டினார்கள். அவர் ஒரு பழைய பேப்பர் வியாபாரி. அவரும் “ஆவ்!” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே எழுந்து வந்து, “நீங்களா! ஏதாவது போஸ்டர் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“ஆமாம்” என்றான் முன்னவன். “சரி, கொடு!”

பின்னவன் கொடுத்தான்.

அதை வாங்கித் தராசில் வைத்து நிறுத்துப் பார்த்து விட்டு, இரண்டு ரூபாயை எடுத்து முன்னவனிடம் கொடுத்தார் செட்டியார். அதை வாங்கிக்கொண்டு, “ஜாக்கிரதை! விஷயம் வெளியே தெரிந்தால் உங்களுக்கும் நல்லதல்ல, எங்களுக்கும் நல்லதல்ல!” என்று செட்டியாரை எச்சரித்துவிட்டு, இருவரும் ஒரு சாயாக் கடைக்குச் சென்றார்கள். பரோட்டா, சால்னா, டீ எல்லாம் சாப்பிட்டுவிட்டுத் தங்கள் குடிசைக்கு வந்தார்கள்.