பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. ஆறாவது

மிருகத்துக்கு ஐந்தே அறிவு; எனக்கு ஆறு அறிவாக்கும்!” என்று மனிதன் அடிக்கடி பெருமையடித்துக் கொள்வதைச் சிங்கத்தால் சகிக்க முடியவில்லை. ஒரு நாள் அது கடவுளிடம் சென்று, “கடவுளே கடவுளே! எங்களுக்கு ஐந்தறிவைக் கொடுத்துவிட்டு மனிதனுக்கு மட்டும் ஆறறிவைக் கொடுத்திருக் கிறீர்களே, இது நியாயமா?” என்று கேட்டது.

கடவுள் திடுக்கிட்டு, “அவனுக்கு நான் எங்கே ஆறறிவைக் கொடுத்தேன்?” என்றார்.

“எங்களுக்கில்லாத பகுத்தறிவை நீங்கள் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத்தான் அவன் ‘ஆறாவது அறிவு’ என்கிறான்” என்றது சிங்கம்.

“நாசமாய்ப் போச்சு; அவனுக்கு நான் கொடுத்த சாபமல்லவா அது?”

“சாபமா!”

“சந்தேகமென்ன? எதையும் அறிய முயல்வதும், அறிந்தாலும் அதை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் நான் அவனுக்குக் கொடுத்த சாபம்தான்!” என்றார் கடவுள்.

“அந்தச் சாபத்தையா அவன் 'பகுத்தறிவு' என்கிறான்? ஐயோ, வேண்டாம்! அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்!” என்று ஒட்டம் பிடித்தது சிங்கம்.