பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3.உண்மை

மாலை நேரம்: வீட்டுக்குரியவள் வழக்கம்போல விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அதை வணங்கினாள். அவனைத் தொடர்ந்து அந்த வீட்டிலிருந்த அனைவரும் தங்கள் கண்ணங்கள் இரண்டையும் மாறி மாறித்தொட்டு வணங்கினர்.

வளைக்குள் இருந்தபடியே இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சுண்டெலி, “இந்த வீட்டில் விளக்குக்கு ஏன் அம்மா, இத்தனை மரியாதை?” என்று தன் தாய் எலியைக் கேட்டது.

“அது உன்னைப்போல் போக்கிரியாயில்லாமல் எல்லார்க்கும் நல்லதாயிருப்பதால்!” என்றது தாய் எலி.

‘ஓகோ!’ என்று அப்போதைக்குத் தலையை ஆட்டிவிட்டுத் தன்னை உள்ளுக்கு இழுத்துக்கொண்டது சுண்டெலி.

நள்ளிரவு வந்தது; எல்லாரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த வேளையிலே, சுற்றுமுற்றும் பார்த்தபடி உள்ளே நுழைந்த ஒரு திருடன், வந்ததும் வராததுமாக விளக்கை அணைத்துவிட்டுத் தன் கை வரிசையைக் காட்ட ஆரம்பித்தான்.

அதைக் கண்ட சுண்டெலி தன் தாய் எலியைப் பார்த்து வியப்புடன் கேட்டது. “எல்வார்க்கும் நல்வதாயிருந்த விளக்கு இந்தத் திருடனுக்கு மட்டும் ஏனம்மா, கெட்டதாய்ப் போய் வீட்டது?

தாய் எலி பெருமூச்சுடன் சொல்லிற்று;

“உன்மைதான்; இந்த உலகில் ‘நல்லவன்’ கூடச் சில சமயம் சிலருக்குக் ‘கெட்டவ’னாகத்தான் தோன்றித் தொலைகிறான்!”