பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35. குறுக்கு வழி

நீண்ட நாட்களாகத் தம்முடைய வாக்காலும் வாழ்வாலும் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்த ஞானி ஒருவர் தலைவிரி கோலமாகத் தம் வழியே சென்று கொண்டிருந் தார்; அவர் அழைக்காமலே அவரைத் தொடர்ந்து ஒரு பெரிய கூட்டம் சென்று கொண்டிருந்தது.

"எப்போது பார்த்தாலும் இவருக்கு மட்டும் இப்படி ஒரு கூட்டமா? என்று பொறாமை கொண்ட ஓர் அஞ்ஞானி, அதற்குக் காரணம் அவருடைய தலைவிரி கோலம்தான் என்று எண்ணி, "இதோ பார், எனக்கும் நான் ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொள்கிறேன்!” என்று வாரியிருந்த தலையைக் கலைத்துக்கொண்டு, "ஆய், ஊய்!” என்று கத்தினான்.

அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை; அவனைச் சுற்றியும் உடனே ஒரு கூட்டம் சேர்ந்தது.

ஆனால் என்ன ஏமாற்றம்! அடுத்த கணமே, "பூ! இவன் ஒரு பைத்தியக்காரண்டா!" என்று சொல்லிக் கொண்டே அந்தக் கூட்டம் கலைந்தது!

荔,荔,荔

36. அபயம்

"எதிலும் சேராத எத்தனையோ பாதகங்கள் இந்த உலகத்தில் தினந்தோறும் நடந்து கொண்டிருக்க, நான் மட்டும் அப்படி என்ன பாதகம் செய்து விட்டேனாம், பஞ்சமாபாதகத்தில் சேர?" என்றது கள்.